கோயமுத்தூர்: நெற்றியில் நாமத்துடன் வந்த திமுக பெண் கவுன்சிலர் மீனா லோகுவுக்கு அடுத்த 3 மன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அவர் மீது அதிமுக பெண் கவுன்சிலர் இன்று தாக்குதல் நடத்தினார். கோவை மாநகராட்சியில் 2015-16ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வியாழக்கிழமை இன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மன்றக் கூட்டத்துக்கு நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டு வந்த திமுக பெண் கவுன்சிலர் மீனா லோகு, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார். மீனாவின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அதிமுக உறுப்பினர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாமம் போட்டுக் கொண்டு வந்த திமுக உறுப்பினர்கள் மீது தண்ணீரை ஊற்றி நாமத்தை அழிக்க அதிமுக உறுப்பினர்கள் முற்பட்டனர். இதைத்தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் மீது அதிமுக உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தினர். அன்னம்மாள் என்ற அதிமுக பெண் கவுன்சிலர் மீனா லோகுவைத் தாக்கினாராம். இதில் மீனா லோகுவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அதிமுக கவுன்சிலர்களின் தாக்குதலைக் கண்டித்து, திமுக கவுன்சிலர்கள் மன்றக் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பில் ஈடுபட்டனர். இதனிடையே, அடுத்த 3 மன்றக் கூட்டங்களில் கலந்து கொள்ள மீனா லோகுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Popular Categories