சென்னை: டிராபிக் ராமசாமியை கைது செய்த வேப்பேரி காவல் ஆய்வாளர் பிரபு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவர், திருவேற்காடு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். வேப்பேரி ஜவஹர் நகரைச் சேர்ந்த வீரமணி, டாக்டர் அழகப்பா சாலையில் காரில் சென்றபோது, அங்கு அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக டிராபிக் ராமசாமி சாலையை மறித்தபடி ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்ததாராம். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகக் கூறி டிராபிக் ராமசாமியை சாலையின் ஓரத்தில் நின்று பேட்டியளிக்குமாறு வீரமணி கூறியதாகவும், அதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து, டிராபிக் ராமசாமி தனது காரை சேதப்படுத்தி, தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வேப்பேரி காவல் நிலையத்தில் வீரமணி புகார் செய்தார். அவரது புகார் மனுவை ஏற்று, வேப்பேரி காவல் ஆய்வாளர் பிரபு அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த டிராபிக் ராமசாமியைக் கைது செய்தார். 80 வயது கடந்த சமூக சேவகர் டிராபிக் ராமசாமி விஷயத்தில் அதிகாலை கைது செய்து அழைத்து வரும் அளவுக்கு மிகப் பெரும் குற்றப் பதிவாக இதைக் கருதிய ஆய்வாளர் பிரபுவுக்கு சமுக ஊடகங்களிலும் அரசியல் மட்டத்திலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனிடையே டிராபிக் ராமசாமியின் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே வேப்பேரி காவல் அலுவலகத்துக்குச் சென்ற லாரி உரிமையாளர்கள் சிலர், டிராபிக் ராமசாமி கைது விவகாரத்தில் காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்ததற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக பூச்செண்டுடன் வந்து ஆய்வாளர் பிரபுவுக்கு பாராட்டு தெரிவிக்க முயன்றனர். இத்தகைய சூழ்நிலையில், வேப்பேரி காவல் ஆய்வாளர் பிரபு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Popular Categories