சென்னை:
தமிழக அரசின் நிகழ்ச்சிகளில்தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று கூறியுள்ளார் சென்னை ஐஐடி இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி.
சென்னை ஐ.ஐ.டி.யில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்ட விழாவில் சமஸ்கிருதத்தில் அமைந்த துதிப் பாடல் பாடப்பட்டு, அதன் பின்னர் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல், சமஸ்கிருததத்தில் துதிப் பாடல் பாடப்பட்டதாக சர்ச்சையைக் கிளப்பினர் சிலர். மேலும், சமஸ்கிருத பாடல் பாடப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என மதிமுக., பொது செயலர் வைகோ., வலியுறுத்தினார்.
இருப்பினும் இந்தச் சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ள ஐஐடி இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி, நிகழ்ச்சியில் பதிவு செய்யப் பட்ட பாடல் எதுவும் போடப் படவில்லை. தேசிய கீதத்தைக் கூட பதிவு செய்ததைப் போடாமல், பாடத்தான் செய்தோம். நிகழ்ச்சியின் துவக்கம் என்பதால் துதிப்பாடல் பாடப்பட்டது. எனவே இதை பெரிதுபடுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, மத்திய அரசின் கீழ் இயங்கும் சென்னை ஐ.ஐ.டி.யில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டிய அவசியமில்லை. தமிழக அரசின் நிகழ்ச்சிகளில்தான் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.



