புது தில்லி:
இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிதி முறைகேட்டில் ஏமாற்றி வெளிநாடு தப்பிச் சென்ற தொழிலதிபர் நீரவ் மோடி, அமெரிக்காவில் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது மேற்கிந்தியத் தீவுகளில் இருக்கிறார் என்று மும்பை மிரர் இதழில் கூறப்படுகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,360 கோடிக்கு கடன் ஏய்ப்பு மற்றும் சட்ட விரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ள நிலையில், அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். அவருக்குச் சொந்தமான பல இடங்களில் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நீரவ்வின் பாஸ்போர்ட் சனிக்கிழமை முடக்கப் பட்டது. அவர் தேடப் படும் நபராக, இப்போது மத்திய அரசால் தீவிரமாக தேடப் பட்டு வருகிறார்.

நீரவ் அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றிருப்பதாகக் கூறப் பட்ட நிலையில், அவர் மேற்கு இந்திய தீவுகளில் உள்ளார் என்று கூறப்படுகிறது. மேற்கு இந்தியத் தீவுகளில் ஒன்று செயின்ட் கீட்ஸ். இங்குதான் நீரவ் தற்போது குடியேற இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளை ஏற்கெனவே செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அவருடனேயே அவரது குடும்பத்தினரும் சேர்ந்து குடியேறவுள்ளனராம்.
நீரவ் ஏற்கெனவே அங்கு பலமுறை சென்று இருக்கிறார். இரண்டு வாரம் முன்பு அங்கு கடைசியாக சென்றிருந்தபோது, அங்கு வீடு வாங்கும் ஏற்பாடுகளையும் செய்தாராம். தற்போது அங்கு குடும்பத்துடன் குடியுரிமைக்கு விண்ணப்பித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கிழக்கு கரீபியனைச் சேர்ந்த சில்வன் செயிண்ட் கீட்ஸ் தீவில், அந்நாட்டு நாணய மதிப்பில் ஒன்றரை கோடிக்கும் அதிகமான முதலீட்டுடன் தொழில் நிறுவனம் தொடங்கும் நபர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். இதை வைத்து அவர் எளிதாக குடியுரிமை பெற்றுவிடலாம் என்று முயற்சி செய்து வருகிறார்.



