காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை ஸித்தி அடைந்தார். அவருக்கு வயது 83.
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். மூச்சுத் திணறல் காரணமாக சங்கரமடம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை அவர் அனுமதிக்கப்பட்டார்.
பல நாட்களாகவே அவருக்கு மூச்சுத் திணறல் இருந்துள்ளது. அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார்.இந்நிலையில் இன்று காலை அவருக்கு மூச்சுத் திணறல் அதிகரித்ததால் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். தீடீரென இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது.
83 வயதாகும் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி மகா பெரியவர் இருந்த போது இளைய பீடாதிபதியாக நியமிக்கப் பட்டவர். பின்னர் 1994 ம் ஆண்டு காஞ்சி சங்கரமடத்தின் 69வது பீடாதிபதியாக பொறுப்பேற்றார். சமூக நலப் பணிகளில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது காலத்தில் தான் காஞ்சி சங்கர மடத்தின் சார்பில், கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் தொண்டு நிறுவனங்கள் அதிகம் வளர்ந்தன. குடிசைப் பகுதிகளுக்கும் இந்து தர்மத்தின் சிறப்பைக் கொண்டு போய்ச் சேர்த்தவர்.