கேள்வியும் பதிலும்: ஆதி சங்கரர் ஐயங்காரா?
தெலுங்கில்: பிரஹ்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்
(Source: Samadhanam- part 2 – by Brahmasri Samavedam Shanmukha Sarma)
கேள்வி:
ஆதி சங்கரர் ‘நாராயண’ நாம ஸ்மரணை செய்தார் என்றும், அவர் பரம்பரையில் வரும் ஆசாரியர்கள் கூட அதையே செய்கிறார்கள் என்றும் சங்கரர் சைவ மதத்தையோ சாக்த மதத்தையோ சார்ந்தவர் அல்ல என்றும் விஷ்ணு பக்தர் மட்டுமே என்றும் சமீபத்தில் ஒரு வைஷ்ணவ பெரியவர் டிவியில் பேசினார். பின்னாட்களில் யாரோ எழுதிய லஹரிகளை ஆதி சங்கரர் எழுதினார் என்று பிரசாரம் செய்துள்ளார்கள் என்றும் கூறினார். சிவனைப் பூஜிப்பவர்கள் பாஷாண்டிகள் என்று கூடக் கூறினார். இவ்வாறு கூறுவது சரியா? இதை கேட்டு மன வேதனை ஏற்பட்டது. அதற்கு ஏற்றாற் போல் சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் சைவ மதத்தைச் சேர்ந்த அரசர்கள் ஒரு வைஷ்ணவரை ஹிம்சித்தார்கள் என்று காட்டினார்கள். அவ்வாறு நடந்ததா?
பதில்:
இது போன்ற வேதனையை தெரிவித்து அதிக அளவில் கடிதங்கள் நிறைய பேர் எழுதுகிறார்கள். பல இடங்களில் அது போன்று வைணவப் பெரியோர்கள் சிவ துவேஷத்தையும் சக்தி துவேஷத்தையும் பரப்பி வருகிறார்கள். எத்தனையோ ஸ்மார்த்த குடும்பங்களையும் சிவனை ஆராதனை செய்யும் குடும்பங்களையும் தம் மதத்திற்கு மாற்றியும் அவர்கள் வீடுகளிலிருந்து சிவன், பார்வதி, கணபதி, முருகன் போன்ற தெய்வ படங்களை நீக்கியும் வருகிறார்கள்.
ஆனால் இச்செயல் பல கடிதங்கள் மூலம் தெரிய வந்த போதிலும் நம் ஹிந்து மதத்திலேயே வெட்கப்படும் விதத்தில் முளை விட்டுள்ள இந்த வேற்றுமைகளை குறிப்பிட்டு பேசுவது சரியாக இருக்காது என்று என்ணி பேசாமலிருந்தேன். ஆனால் மிக அதிக அளவில் இது போல் கேள்விப்படுவதால் உங்களைப் போன்றோர் தெரிவித்த வேதனையில் சிறிது பாகத்தை வெளியிட்டுள்ளோம்.
உண்மையில் வேற்றுமை வாதிகளான அந்த பெரியோர்களுக்கு ஆதிசங்கரரைப் பிடிக்காது. அவரை நிந்திப்பது கூட அவர்களின் மதப் பிரசாரங்களில் ஒரு பாகம். அது மட்டுமல்ல. சில காலம் முன்பு வரை ஆதி சங்கரர் சைவர் என்று பிரசாரம் செய்தவர்களும் அவர்கள்தாம். திடீரென்று சங்கரரை வைணவ முத்திரையில் காட்ட வேண்டுமென்று எதற்காக அல்லாடுகிறார்களோ தெரியவில்லை.
ஆதி சங்கராசாரியார் நாராயண ஸ்மரணை செய்தார். அவர் பரம்பரையில் ஆசாரியார்களும் அதையேதான் செய்கிறார்கள். உண்மையே. ஆனால் அந்த ஆசாரியார்கள் தம் தம் பீடங்களில் சங்கரர் காலத்திலிருந்தே பரம்பரையாக வருகின்ற சந்திர மௌலீஸ்வரரை பூஜை செய்கிறார்கள். ஸ்ரீசக்ர அர்ச்சனை செய்கிறார்கள். பின், இது சிவ பக்தர்களின் வழிபாடு இல்லையா?
ஆதி சங்கரர் சமன்வயவாதி. கருத்தொற்றுமை உள்ளம் கொண்டவர். சுத்தமான வைதீக சம்பிரதாயத்தை பிரதிஷ்டை செய்தவர். பஞ்சாயதன பூஜையை ஆரம்பித்து வைத்த சம ஐக்கியவாதி, ஒற்றுமைவாதி. சிவ, கேசவ, சக்தி, சூரிய, கணபதி, ஸ்காந்த மதங்களை தூய்மையாக பிரதிஷ்டை செய்த ஷண்மத ஸ்தாபக ஆசாரியார். அவர் கண்ணோட்டத்தில் ஹரி ஹர பேதம் இல்லை.
சங்கரர் எழுதியதாக புகழ் பெற்ற லஹரிகள் – சிவானந்த லஹரி, சௌந்தர்ய லஹரி. இவற்றை அவர்தான் எழுதினார் என்று சங்கர விஜய நூல்கள் ஸ்பஷ்டமாக தெரிவிக்கின்றன. சங்கர மட பீடாதிபதிகளும் அதையே போதிக்கிறார்கள். ஒரு வேளை சங்கரர் எழுதவில்லை என்று பிடிவாத வாதம் செய்தாலும் அந்த நூல்களின் மதிப்பு ஒன்றும் குறைந்து விடாது. அவை பவித்திரமான மதுர ரசமயமான துதிகள். பாரதீய ஸ்தோத்திர சாகித்தியத்தின் மேரு சிகரங்கள்.
இன்னும் சொல்லப் போனால், பகவத் கீதையை ஸ்ரீகிருஷ்ணர் கூறவில்லை என்று வாதிப்பவர்களும் உள்ளார்கள். அப்படிப்பட்ட வாதங்களை ஏற்றுக் கொள்வோமா? மாட்டோம் அல்லவா? உண்மையில் சிவன், கேசவன், சக்தி போன்றவர்கள் யாருமே வேதத்தில் பிரதானம் இல்லை என்றும் நிராகார ஈஸ்வரனே பிரதானம் என்றும் கூறும் இன்னுமொரு சம்பிரதாயத்தினர் கூட உள்ளனர். அவர்களின் பலமான வாதங்களின் முன் இந்த வைணவப் பெரியோர்களின் சித்தாந்தங்கள் கூட பறந்து விடும்.
இப்படிப்பட்ட வேற்றுமை வாதிகளின் தீய வாதங்களை அன்று ஸ்ரீஅப்பைய தீட்சிதர் போன்றோர் தர்க்க வாதத்தில் கண்டித்துள்ளார்கள். சிவார்க்க மணி தீபிகை, சிவ தத்துவ விவேகம், சிவாத்வைத தர்சனம் போன்ற நூல்கள் இதற்கு எடுத்துக் காட்டு. மார்கண்டேயர், கௌதமர், ததீசி, உபமன்யு போன்ற மகரிஷிகள், காளிதாசர் போன்ற கவிகள் கூட சிவ பக்தர்களே. அவர்கள் சிவ பக்தர்களாதலால் அவர்களை பாஷாண்டிகள் என்று நிந்திப்பது பாவம் அல்லவா? சிவனை வேண்டாம் என்று நிராகரித்து நிர்வாகம் நடத்திய தட்சன் அடைந்த கதி அனைவரும் அறிந்ததே.
“பவித்ர கீர்தம் தமல்லங்ய சாசனம்
பவான ஹோ த்வேஷ்டி சிவம் சிவேதர:” (பாகவதம்)
—“பவித்திர கீர்த்தி உடையவன், தாண்ட முடியாத சாசனத்தால் ஜகத்தினை அடக்கி ஆளுபவன் ஆன மங்கள ஸ்வரூபனான சிவனை, அஹோ! அமங்களனான நீ துவேஷிக்கிறாய்” என்று சதீ தேவி தட்சனிடம் கூறிய சொற்களை இங்கு இந்த வைணவப் பெரியோருக்குக் கூட விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் ஒரே பரப்பிரம்ம த்ததுவத்தை வெவ்வேறு வழி முறைகளால் வழிபடுவதே நம் சம்பிரதாயங்களில் உள்ள சௌந்தர்யம்.
சைவம், வைணவம், சௌரம், சாக்தம், காணபத்யம் போன்றவை நம் வேத மதத்தில் உள்ள வேறுபட்ட சம்பிரதாயாங்கள். இவை அனைத்தும் சிறப்பானவையே. இவற்றுள் தோன்றிய ஆசாரியர்கள் அந்தந்த சம்பிரதாயங்களை காப்பாற்ற வேண்டியது தேவையே. ஆனால் இதர சம்பிரதாயங்களை நிந்திப்பதென்பது மன்னிக்க முடியாத குற்றம். இது சமுதாய துரோகச் செயல்.
ஒரு பக்கம் வேற்ற மதங்களின் புகுதலால் திக்கு முக்காடுகின்ற சனாதன தர்மத்திற்கு, இம்மாதிரியான அற்ப புத்திகளின் ஏளனங்கள் ஆபத்தானவை. இவற்றை இந்துக்ககள் அனைவரும் கண்டிக்க வேண்டும். நமக்கு சைவம், வைணவம், சாக்தம் போன்ற அனைத்தும் பூஜைக்கு உகந்தவையே. அந்தந்த ஆசாரியர்கள் அனைவரும் வணக்கத்துக்கு உரியவர்களே!
இந்த சந்தர்பத்தில் சைவ பீடாதிபதிகளும், சங்கர மட பீடாதிபதிகளும் இப்படிப்பட்ட வேற்றுமை வாதிகளை கண்டிக்க வேண்டும். ஒரு சம்பிரதாயத்தின் ஆழம் அந்த சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கே தெரியும். அவற்றைப் பற்றி எதுவும் தெரியாதவர்கள் தம் சித்தாந்தங்களின் வண்ணக் கண்ணாடி வழியாக வேறு சித்தாந்தம் பற்றி தீர்மானிப்பது சரியல்ல அல்லவா?
இனி, திரைப்படம் பற்றி. அந்த சினிமாவை எடுத்த நாத்திகர் பிறவியிலேயே சிவ துவேஷிகளின் பரம்பரையைச் சேர்ந்தவர் என்பது கவனிக்கத்தக்கது. முந்தைய வரலாற்றில் சைவர்களும், வைணவர்களும் மதப் பற்றால் அடித்துக் கொண்டார்கள்.
ஆனால் சினிமாவில் காட்டிய அளவு கோரமாக அல்ல. பரஸ்பர வெறுப்புகள் இரு புறமும் சமமாக இருந்தன. ஆயின் விசாலமான கண்ணோட்டம் கொண்ட உண்மையான சனாதன தர்ம வாதிகளின் தலையீட்டாலும் கருணையாலும் அப்படிப்பட்ட தீய காலங்களில் இருந்து வெளி வந்து விட்டோம்.
மீண்டும் வெட்கமின்றி தற்போது சிவ நிந்தனை, கேசவ தூஷணை, ஜகந்தம்பாள் இல்லை என்று கூறுவது போன்ற விரும்பத் தகாத சூழ்நிலைகளை உருவாக்கி, போதித்து வருபவர்களை இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கண்டிக்க வேண்டும்.
“சிவாய விஷ்ணு ரூபாய” என்று கூற வேண்டிய சூழல அன்று எதனால் ஏற்பட்டது என்று ஆலோசிக்க வேண்டும். மீண்டும் ஹிந்து மதத்தை துண்டாக்கும் இந்த பிரிவினை வாதிகளை ஏற்கக் கூடாது. ‘சிவமச்யுதம்’ என்று கூறிய வேத வாக்கியத்தை நாமனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.



