திருச்சி:
என் மனைவி கர்ப்பமாக இருந்தார் என்பதால் மெதுவாகத்தான் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தேன். என்னை அனுப்பிவிட்டு, பின்னர் துரத்தி வந்து எட்டி உதைத்தார் அந்த ஆய்வாளர். பணம் கேட்டாலும் கொடுத்திருப்பேன், ஆனால் இப்படி கொன்று விட்டாரே! அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நான் உயிருடன் இருக்க மாட்டேன்” என்று இளைஞர் ராஜா கதறி அழுதார்.
மனைவியைப் பறிகொடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ராஜா, தனக்கு நேர்ந்த கொடுமையைக் கதறியபடி கூறினார்… “எங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. மனைவி நீண்ட நாட்களுக்குப் பிறகு கர்ப்பம் தரித்திருந்தார். மூன்று மாதம் என்பதால் ஜாக்கிரதையாக பார்த்துக் கொண்டோம்.
நேற்று உறவினர் வீட்டு நிச்சயதார்த்தம் என்பதால் மனைவியுடன் மாலை நேரத்தில் புறப்பட்டு திருவெறும்பூர் நோக்கிச் சென்றோம். மனைவி மூன்று மாத கர்ப்பிணி என்பதால் நான் வாகனத்தை மெதுவாகத்தான் ஓட்டி வந்தேன். வழியில் வாகன சோதனை என்று மடக்கினார்கள்.
நான் ஹெல்மெட் போடவில்லை. அதனால் வண்டியில் இருந்து சாவியை எடுத்துக் கொண்டார்கள். பின்னர் மீண்டும் சாவியை கொடுத்தார்கள். அதனால், என்னை போகச் சொல்லிவிட்டார்கள் என்று நினைத்து மனைவியுடன் வாகனத்தை எடுத்துக்கொண்டு வந்தேன். ஆனால் விடாமல் என்னை பல கிலோ மீட்டர் துரத்தி வந்துள்ளார் அந்த ஆய்வாளர்.
நான் ஏதாவது தவறு செய்திருந்தாலும் என்னை மடக்கி நிறுத்தி அபராதம் போட்டிருக்கலாம். அப்படி என்றாலும் பணம் கொடுத்திருப்பேனே! இப்படி அநியாயமாக எட்டி உதைக்கலாமா? எட்டி உதைத்து கீழே விழுந்ததில் என் மனைவி உயிரிழந்துவிட்டார். போன உயிரை அவர் திருப்பித் தருவாரா? நீண்ட நாட்களுக்குப் பின் என் மனைவி கர்ப்பம் ஆனதால் பெரிய கனவுகளோடு இருந்தோம். நொடிப்பொழுதில் அத்தனை கனவையும் கலைத்து விட்டார்…
எட்டி உதைத்துக் கீழே தள்ளிவிட்ட அந்த ஆய்வாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நானும் உயிரோடு இருக்க மாட்டேன்… என்று கதறி அழுதார் அந்த இளைஞர் ராஜா.
நீதிமன்றம், கட்டாயம் ஹெல்மெட் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஹெல்மெட் போடாமல் சென்று விபத்துகளில் சிக்கி உயிரிழப்போர் பலர். ஹெல்மெட் போட வில்லை என்று கூறி அபராதத்தை வசூலிப்பதற்குப் பதிலாக, சிறிதளவு லஞ்சத்துக்காக கைநீட்டும் போக்குவரத்து அதிகாரிகளும் பலர். ஆனால், இப்படி ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று வண்டியை எட்டி உதைத்து விபத்து ஏற்படுத்தும் காவல் அதிகாரிகள் சிலர்தான். இவர் போன்றவர்களால் போக்குவரத்து காவல் துறைக்கே அவமானம் என்பதுதான் இந்தச் சம்பவத்தைக் குறித்து பொதுமக்கள் கூறும் விவாதக் கருத்துகளும்!