
தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதில் வழக்கம்போல் திமுக., வெளிநடப்பு செய்தது.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 10.30 மணிக்கு தொடங்கி, துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.
முன்னதாக, விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதாலும், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதாலும் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. பட்ஜெட் தாக்கல் முடிந்ததும், சபாநாயகர் தனபால் அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் பிற்பகலில் நடைபெறுகிறது. இதில் சட்டசபை கூட்டத்தை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அனைத்துக்கட்சி குழுவை சந்திக்க, இதுவரையில் பிரதமரை சந்திக்க வாய்ப்பு இல்லாமல் உள்ளது. இதுதொடர்பாக, இன்று மாலை சட்டப்பேரவையின் சிறப்பு அமர்வு நடைபெற வாய்ப்புள்ளதாகவும், இக்கூட்டத்தில் காவிரி தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இத்தகைய பின்னணியில், இன்று காலை தமிழக பட்ஜெட் கூட்டத் தொடருக்கு கருப்பு சட்டை அணிந்து திமுகவினர் வந்தனர். பட்ஜெட் கூட்டத்தொடருக்கு திமுகவினர் ஏன் கருப்பு சட்டையில் வந்துள்ளனர் என்று கேட்டபோது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மத்திய அரசு தாமதம் செய்வதற்கு தாங்கள் கருப்பு சட்டையில் வந்ததாக அவர்கள் கூறினர்.
இருப்பினும், வழக்கம்போல், கறுப்புச் சட்டை, காவிரி முழக்கம் என பட்ஜெட் உரையை புறக்கணித்து திமுகவினர் வெளி நடப்பு செய்தனர். இது குறித்து தெரிவித்த திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அரசு முயற்சிக்கவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்வதாகத் தெரிவித்தார்.



