சென்னை: ஓட்டைப் பானையில் சமையல் செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள் என தமிழக அரசு பட்ஜெட் குறித்து எதிர்க் கட்சித் தலைவரும் திமுக., செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கருத்து கூறியுள்ளார்.
தமிழக நிதியமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை இன்று 2018-19 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்து பேசினார். ஜெயலலிதா அமைச்சரவையில் தொடங்கி, இதுவரை ஏழு பட்ஜெட்களை சட்டசபையில் தாக்கல் செய்துள்ளார் ஓபிஎஸ். இது, அவர் தாக்கல் செய்யும் 8ஆவது பட்ஜெட்.
இந்த பட்ஜெட் குறித்து, பட்ஜெட் தாக்கலின் போது சபையில் இல்லாமல் வெளிநடப்பு செய்த மு.க.ஸ்டாலின், பின்னர் வெளியில் கூறியது…
ஜி.எஸ்.டி.யால் ரூ.9,000 கோடி இழப்பு ஏற்படும் என்று ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால் ஜி.எஸ்.டி.யால் பலனும் லாபமும் அடைந்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. மத்திய அரசுக்கு ஜால்ரா போடும் பட்ஜெட் உரை தாக்கல் செய்துள்ளது என மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
நெசவாளர்கள், மீனவர்கள், விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் எந்தத் திட்டமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மீனவர்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மேலும் நிதி மேலாண்மை மோசமான நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது.
மாநிலத்தின் நிதி நிலை ஸ்தம்பித்துள்ளது என்பது இந்த பட்ஜெட்டில் தெரிகிறது. ஓட்டை பானையில் சமையல் செய்ய முயற்சித்து இருக்கிறார்கள் என்பதே இன்றைய பட்ஜெட்
தமிழக பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை. விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள் முன்னேற்றத்திற்கு எந்த திட்டமும் இல்லை… என்று கூறினார் ஸ்டாலின்.
முன்னதாக, இன்று காலை அவைக்கு கறுப்பு சட்டைஅணிந்து வந்தார்கள் திமுக.,வினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு முயற்சி எடுக்கவில்லை என்று கூறி உடனே வெளிநடப்பு செய்தார்கள்.