
சென்னை : சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, மேடவாக்கம் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் நேற்று இரவு முதலே மிதமான மழை பெய்து வருகிறது.
தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனத்த மழை பெய்து வருவதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென் தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக கனத்த மழை பெய்த நிலையில், வட தமிழகத்தில் அநேக இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில்,வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சென்னை உள்பட வட மாவட்டங்களின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், விழுப்புரம், திருக்கோவிலூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரியின் முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், வீராம்பட்டினம் போன்ற பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.
மேற்கு மாவட்டங்களின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. ஒசூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், எரியோடு, கோவிலூர் குஜிலியம்பாறை ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.
வந்தவாசி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், விருதுநகர் மாவட்டம், கோவிலாங் குளத்தில் 40 மி.மீ. மழை பதிவானது. திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 30 மி.மீ. மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



