சென்னை: புதிய பார்வை இதழாசிரியரும் தமிழக அரசியல் வட்டாரத்தில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாகவும் திகழ்ந்த ம.நடராசன் செவ்வாய்க்கிழமை இன்று அதிகாலை காலமானார். அவருடைய உடல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப் படுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் 1942ஆம் ஆண்டில் பிறந்தவர் நடராஜன் (76). தமிழார்வம் கொண்டிருந்த நடராசன், தான் கல்லூரியில் பயின்ற காலத்தில், அப்போது மாணவர்கள் பலரை அரசியல் களத்துக்கு இழுத்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றார். மொழிப் போராட்டத்தின் மூலம் திராவிட இயக்க அரசியலில் நுழைந்தவர் நடராஜன். பின்னாளில் திமுக., ஆட்சிக்கு வந்தபோது, ஹிந்தி எதிர்ப்புப் போரில் பங்கேற்ற நடராசனை அரசு மக்கள் செய்தித் தொடர்புத் துறை அதிகாரியாக நியமித்தது. இவர், 1975-ஆம் ஆண்டு சசிகலாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தை முன்னின்று நடத்தியவர் திமுக தலைவர் கருணாநிதி.
1980களில், மாவட்ட ஆட்சியராக தென்னாற்காடு மாவட்டத்தில் சந்திரலேகா பணி புரிந்த போது, அதிகாரியாக பணியில் இருந்த நடராசன், அவரது மனைவி சசிகலா ஆகியோர் ஜெயலலிதாவுக்கு அறிமுகமானார்கள். சந்திரலேகாவின் மூலம் ஜெயலலிதாவின் நட்பு பெற்ற சசிகலா பின்னாளில் அவருக்கு பின்புலமாக இருக்க, ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவின் ஆலோசகராகவும் இருந்து வந்தார் நடராஜன். இது அவரது அரசியல் வாழ்வுக்கு மேலும் வலு சேர்த்தது. ஆனால் பின்னாளில் முறைகேடு புகார்களால் ஜெயலலிதா அவரை புறக்கணித்தார்.
கடந்த 2017 அக்டோபரில் நடராசனுக்கு உறுப்புகள் பல செயலிழந்த நிலையில், சென்னை குளோபல் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு பல்லுறுப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் உடல் நலம் தேறி வீடு சென்றார் நடராசன். ஆனால் ஆறு மாதங்களுக்குள் அவருக்கு மீண்டும் உடல் நலக் குறைபாடு ஏற்பட்டது.
கடந்த சனிக்கிழமை மார்ச் 16ம் தேதி, மார்பு பகுதியில் நோய்த்தொற்று ஏற்பட்டு மீண்டும் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடராசன். மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தும், நடராசனின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இன்று அதிகாலை 1.30க்கு ம.நடராசன் உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவமனை அறிக்கை அளித்தது.
இதன் பின்னர் நடராசனின் உடல் எம்பார்மிங் செய்வதற்காக ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று காலை அவரது உடல் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது ஆதரவாளர்கள் பலரும் அவரது இல்லத்தில் குவிந்தனர்.
காலை 7 மணி முதல் பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் 11 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் அவரது உடல், பின்னர் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு நாளை இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.
இதனிடையே, சொத்துக் குவிப்பு வழக்கில் 4 வருட சிறைத் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ம.நடராசனின் மனைவி சசிகலா, தனது கணவர் இறுதிச் சடங்கில் பங்கேற்க பரோலில் வருகிறார்.
கடந்த 2017 அக்டோபரில் நடராசனுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற போது, தனது கணவரை பார்ப்பதற்காக சசிகலாவுக்கு 5 நாட்கள் ‘பரோல்’ வழங்கப்பட்டது. அவர் சென்னை வந்து, கணவரை பார்த்தார். அப்போது, அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை சிறைத்துறை நிர்வாகம் விதித்து பரோல் அளித்தது.
இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமானதால் திங்கள் கிழமை நேற்று பரோல் கோரி விண்ணப்பித்ததாகவும் ஆனால் சிறைத்துறை நிர்வாகம் மறுத்ததாகவும் செய்திகள் பரவின. ஆனால், சசிகலாவின் வழக்கறிஞரோ, அவர் இன்னும் பரோலுக்கு விண்ணப்பிக்கவில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில், நடராசன் காலமானதால், அவர் இன்று 15 நாட்கள் பரோல் கோரி விண்ணப்பிக்க உள்ளதாகவும், அதன் பின்னர் அவர் தஞ்சைக்கு செல்வார் என்றும் சசிகலாவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும், கர்நாடக சிறை விதிமுறைகளின்படி தண்டனைக் கைதிகளுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே ‘பரோல்’ வழங்கப்படும். சசிகலா கடைசியாக பரோலில் விடுதலையாகி 5 மாதங்கள் முடிவடைந்துள்ளதால், அந்த 6 மாத கால அளவு முடிவதற்கு இன்னும் சுமார் 20 நாட்கள் இருக்கின்றன. எனவே விதிகளின் படி அவருக்கு பரோல் கிடைக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், கணவர் உயிரிழந்துள்ளதால் இறுதிசடங்கில் பங்கேற்க சசிகலாவுக்கு ‘பரோல்’ வழங்குவது குறித்து கர்நாடக அரசு முடிவு செய்ய முடியும் என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.