சென்னை: சென்னையில் ஓடிக் கொண்டிருந்த மின்சார ரயில் பெட்டிகள் திடீரென இணைப்பு துண்டிக்கப் பட்டு, பாதியாகக் கழன்றன. இதனால் அதில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு வழக்கம்போல் மின்சார ரயில் ஒன்று இன்று காலை சென்று கொண்டு இருந்தது. இந்த மின்சார ரயில் ஊரப்பாக்கம் – கூடுவாஞ்சேரி இடையே வந்தபோது திடீரென மின்சார ரயில் பெட்டிகளின் இணைப்புச் சங்கிலிகள் இரண்டாக உடைந்தன. இதனால் முன்பகுதி பின்பகுதியாக பெட்டிகள் விலகி விபத்து ஏற்பட்டது.
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் இந்த மின்சார ரயிலில் தான் சென்னை பொத்தேரி பகுதியில் உள்ள கல்லூரிகளுக்கு ஆயிரக்கணக்கில் மாணவர்கள் வருகின்றனர். மேலும் பரனூர் பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனங்களுக்கு சென்னையில் இருந்து தினமும் சென்று வருபவர்களும் பலர். எனவே இந்த ரயில் சேவைகள் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிந்தபடியேதான் செல்லும்.
இந்நிலையில் இன்று இந்த ரயிலில் திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் கலக்கமடைந்த பயணிகள் நடுவழியிலேயே நின்ற ரயிலில் அப்படியே இருந்தனர். இந்த விபத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. விபத்திற்குள்ளான ரயில், நீண்ட நேரம் அதே இடத்தில் நின்றதால் சுமார் ஒரு மணி நேரம் வரை ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இரண்டு பகுதியாகப் பிரிந்த மின்சார ரயில் பெட்டிகளை இணைக்கும் பணியில் ரயில்வே பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.