இதுதான் நேரம்.. பேஸ்புக்கை டெலிட் செய்க – இப்படி ஒரு டிவீட் பதிவிட்டுள்ளார் வாட்ஸ் ஆப் துணை நிறுவுனர். இதைக் கண்டதும் பலருக்கு அதிர்ச்சி!
தேர்தல் நேரத்தில் கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்ற நிறுவனம், பேஸ்புக் பயனாளிகளின் விவரங்களை அவர்களுக்கே தெரியாமல் எடுத்து அதன்படி உத்திகளைக் கையாண்ட பிரச்னை இப்போது பெரிதாகி இருக்கிறது. பேஸ்புக் பாதுகாப்பானது இல்லை என்று பலரும் இப்போது குற்றம் சாட்டி வருகிறார்கள்.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருந்து, அவர்களின் தகவல்களை முறையின்றி சோதனை செய்துள்ளது. பேஸ்புக் நிறுவனம் இதற்கான தனது பயனாளிகளிடம் எந்த அனுமதியும் பெறாமல் இந்த சர்வே சோதனைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் தேர்தல் வியூகம் வகுக்கப் பட்டதாக கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவன முன்னாள் ஊழியர் ஒருவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இதை அடுத்து பெரும் புயல் கிளம்பியது அமெரிக்காவில். இதனால் பலரது அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக குற்றச் சாட்டு முன்வைக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப் துணை நிறுவனராகத் திகழ்ந்த பிரைன் ஆக்டன் ஒரு டிவீட் செய்தார். அதில் இதுதான் சரியான நேரம். பேச்புக்கை விட்டு விலக… என்று! இப்போது இந்த டிவீட் பலராலும் விவாதிக்கப் பட்டு வருகிறது. டிவிட்டரில் இந்த ஹாஷ்டாக் போட்டு பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த டிவீட் இதுதான்…
It is time. #deletefacebook
— Brian Acton (@brianacton) March 20, 2018
பிரைன் ஆக்டன், வாட்ஸ் ஆப் நிறுவனம் தொடங்குவதில் மூளையாக செயல்பட்டவர். அதன் துணை நிறுவனராகத் திகழ்ந்தவர். Apple, Yahoo, WhatsApp, Signal (ஆப்பிள், யாஹூ) ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். தொழில்நுட்பத் துறையில் பலராலும் மதிக்கப்படும் நபர்.
கடந்த 2014ஆம் ஆண்டு வாட்ஸ்அப் செயலியை பேஸ்புக் நிறுவனம் 19 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கி, வாட்ஸ்அப்பை தனதாக்கிக் கொண்டது. இருப்பினும், பிரைன் ஆக்டன் தொடர்ந்து வாட்ஸ்அப் குழுவில் பணியாற்றி வந்தார். பின்னர் சில மாதங்களுக்கு முன் பிரைன் ஆக்டன் வாட்ஸ் ஆப்பில் இருந்து விலகி சிக்னல் எனும் புஷ் ஆப் நிறுவனத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.