இப்போது ஆத்திக நாத்திக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. ஏட்டிக்குப் போட்டியாய் எல்லாம் எக்குத் தப்பாய் நடக்கின்றன. சமூக வலைத்தளங்கள் பெருகிவிட்ட காலத்தில், கருத்துரிமை என்ற பெயரில் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் சாதிய, மத வகுப்பு ரீதியிலான கொச்சை வார்த்தைகளை அள்ளி வீசுகின்றனர்.
இதுவரையில் பிற சமூகத்தை, ஆன்மிக வழிபாடுகளை, ஆன்மிகத் தமிழ் நூல்களை கொச்சைப்படுத்தி, பிறர் மனம் புண்படுத்துவதையே தங்கள் வாடிக்கையான அரசியலாகச் செய்து வந்த பெரியாரியவாதிகளுக்கு பதில் கொடுக்கிறோம் என்று இப்போது இந்து முன்னணியும் களத்தில் இறங்கியிருக்கிறது.

மார்ச் 23 வெள்ளிக்கிழமை இன்று மாலை 6.30-8.30 பெரியார் திடலில் இராமாயணம் – இராமன் – இராம ராஜ்யம் என்ற தலைப்பில் திராவிடர் கழகம் சார்பில் அதன் தலைவர் கி.வீரமணி சொற்பொழிவு நிகழ்த்துவார் என்று போஸ்டர்கள் நகரில் ஒட்டப்பட்டன.
ஒவ்வொரு முறையும் மத உணர்வுகளைப் புண்படுத்தும் தி.க.வினரின் இது போன்ற செயல்கள் குறித்து இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ஆட்சேபம் எழுப்பி, தங்கள் புகார்களை அளித்து வந்தனர். ஆனால், அவை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளப் பட்டதில்லை. இதனால் ஏட்டிக்குப் போட்டி என அவர்களும் களம் இறங்கியுள்ளனர்.
திராவிடர் கழகம் போஸ்டர் அச்சடித்து ஒட்டிய அதே நாளில் பதிலுக்கு பெரியார் மணியம்மை குறித்து இந்து முன்னணி சார்பில் விளக்கக் கூட்டம் நடைபெறும் என்றும், இந்து முன்னணி அலுவலகத்திலேயே வைத்து இந்தக் கூட்டம் நடைபெறும் எனவும் பதிலுக்கு தகவல் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பரப்பப் பட்டது.

இந்த ஆய்வு சொற்பொழிவை, ஈ.வெ.ரா.வின் மறுபக்கம் புத்தகத்தை எழுதிய மா.வெங்கடேசன் நிகழ்த்துவார் என்று சமூக வலைத்தளங்களில் பகிரப் பட்டது.
ஏற்கெனவே சிலை உடைப்புப் பேச்சு, அவமரியாதை, தகராறு, அதனால் எழுந்த அரசியல் ரீதியான பிரச்னைகள் என்று தமிழகம் கொந்தளிப்பில் கிடக்க, ஏட்டிக்குப் போட்டி, பதிலுக்கு பதில் என்று இறங்கி விட்டதன் விளைவால் சமூகப் பதற்றம் மேலும் அதிகரிக்குமே தவிர, இதற்கு ஒரு முடிவு நிச்சயம் கிடைக்காது என்பது அனைவரும் அறிந்ததுதான்! அவனை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்… என்ற கதையாகியுள்ளது இது!



