தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையின் 2ஆவது ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டன.
`வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம் அடுத்த ஆண்டு முடிவடைகிறது. இந்நிலையில், ஆலை விரிவாக்கப் பணியினை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. இதை எதிர்த்து, குமரரெட்டியாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
தூத்துக்குடியிலும் சுற்று வட்டாரப் பகுதியிலும் வணிகர்கள், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முழு கடையடைப்புப் போராட்டத்தை நேற்று நடத்தினர்.
தமிழக அரசு சிப்காட் மூலம் கையகப்படுத்திய நிலத்தை, நில உரிமையாளர்களுக்கு மீண்டும் ஒப்படைக்க வேண்டும். ஸ்டெர்லைட் விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முழு அடைப்புப் போரட்டம் நடக்கிறது.
இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை, மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு எதிராகப் போராடி வெற்றி கண்டது போல் மேற்கொள்ள வேண்டும் என்று சிலர் சமூக வலைத்தளங்களிலும், நோட்டீஸ் கொடுத்தும் தூண்டி விட்டுக் கொண்டிருப்பதால், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என தூத்துக்குடி போலீஸார் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தங்களின் போராட்டத்தை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்ல திட்டமிட்டவர்கள் மதுரைக் கிளையில் அனுமதி பெற்று, இன்று பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்தனர். ஆனால், சட்டம் ஒழுங்குப் பிரச்னை காரணம் காட்டி காவல்துறை, பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளது. பொதுக்கூட்டம் மட்டுமே நடத்த அனுமதி அளித்திருக்கிறது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான இப்போராட்டம் மற்றும் பொதுக்கூட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடியில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. நகர் முழுவதும் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்தப் போராட்டத்துக்கு மீனவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நாட்டுப் படகு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மினி பஸ், ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஆகியவையும் ஓடவில்லை.
இதனிடையே, லண்டனில் உள்ள தமிழர்கள், ஸ்டெர்லைட் ஆலை அதிபரின் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி கோஷமிட்டுள்ளனர்.