
சென்னை: சென்னையில் உள்ள நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி வீட்டின் பூட்டை உடைத்து, 170 சவரன் நகைகள், மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.
நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி கிரகலட்சுமி. இவரது சகோதரர் நாகராஜ், சென்னை தி.நகரில் உள்ள தெற்கு போக் சாலையில் வசித்து வருகிறார். இவரது வீட்டில், கிரகலட்சுமிக்கு என்று ஓர் அறை தனியாக உள்ளது. சென்னை அடையாறில் கிரகலட்சுமி வசித்து வருவதால், அவர் எப்போதாவதுதான் இங்கு வந்து தங்குவாராம்.
இந்நிலையில் நாகராஜ் நேற்றிரவு 10 மணி அளவில் வீட்டைப் பூட்டிவிட்டு உறங்கியுள்ளார். இன்று காலை 7 மணி அளவில் அவர் எழுந்து பார்த்தபோது, அவரது வீட்டின் பின்பக்க கிரில் கேட் உடைக்கப் பட்டிருப்பதைக் கண்டுள்ளார். பின்னர், கிரில் கேட் வழியாக மர்ம நபர்கள் உள்ளே நுழைந்துள்ளதை அவர் உணர்ந்துள்ளார்.
பின், தனது அறைக்குத் திரும்பிய நாகராஜ், அங்கே சோதித்துப் பார்த்தபோது தனது அறையில் வைத்திருந்த 20 சவரன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப் பட்டிருப்பது அவருக்கு தெரிய வந்தது. மேலும் தன் அறைக்கு எதிரில் உள்ள கிரகலட்சுமியின் அறையையும் உடைத்து அதே நபர்கள் நகை பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இது குறித்து மாம்பலம் போலீஸாருக்கு அவர் கொடுத்தார்.
நாகராஜின் தகவலை அடுத்து போலீஸார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். கிரகலட்சுமி அறையில் எவ்வளவு நகை போனது என்பது தெரியாததால் கிரகலட்சுமிக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர் உடனடியாக வந்து பார்த்தார். அப்போது 150 சவரன் நகை திருடு போனது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் மோப்ப நாயை வரவழைத்தனர்.
தொடர்ந்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. திருடு போன வீட்டிலும் அருகிலுள்ள வீடுகளிலும் இருக்கும் கண்காணிப்பு கேமராக்கள் குறித்து போலீஸார் விசாரித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.



