சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக சார்பில் உண்ணாவிரதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதை அடுத்து, சென்னை சேப்பாக்கத்தில் அமைக்கப்பட்ட மேடையில் திடீரென முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டுள்ளனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்தாமல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்திய மத்திய அரசைக் கண்டித்து இன்று உண்ணாவிரதம் நடைபெறுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ள ஸ்கீம் – திட்டம் என்ற வார்த்தைக்கு விளக்கம் அளிக்குமாறு கேரள கர்நாடக அரசுகள் வலியுறுத்தியதை அடுத்து, இதற்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடியது மத்திய அரசு. இருப்பினும், ஸ்கீம் என்பதை வாரியமாகவே கருதி, அதை அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து, தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 9-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து, அதிமுக., சார்பில் ஏப்ரல் 3ஆம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று கட்சி தலைமை அறிவித்தது. இதற்காக மாவட்ட வாரியாக நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டனர்.
அதன்படி, அ.தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றார். முதலமைச்சருடன் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதே போல் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த பகுதி நிர்வாகிகள் தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது.
சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டம் காலை 8 மணி தொடங்கி, மாலை 5 மணி வரை தொடர்கிறது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் முதன்மையாகக் கலந்து கொண்டுள்ளனர்.
முன்னதாக, இந்தப் போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ” காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக., நடத்தும் உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி பெறும்” என்று குறிப்பிட்டார்.