சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை நடைமுறைப் படுத்தக் கோரி, தமிழகம் எங்கும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், பல இடங்களில் பஸ் மீது கல்வீச்சு, கண்ணாடி உடைப்பு என வன்முறைகள் வெடித்தன.
நாமக்கல் அருகே குமாரபாளையம் பகுதியில் 2 அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப் பட்டன. கிருஷ்ணகிரி அருகே மோட்டூரில் 2 அரசுப் பேருந்துகளின் கண்ணாடியை மர்மநபர்கள் உடைத்தனர். மதுரையில் திமுக.,வினரின் போராட்டத்தின் போது அடிதடி ரகளை ஏற்பட்டது. திமுக.,வினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.
வேலூர் அருகே காட்பாடியில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் தனியார் பேருந்து கண்ணாடி உடைக்கப் பட்டது. காட்பாடி முழுவதும் கடைகள் வணிக நிறுவனங்கள் பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டுள்ளன.
திருத்தணியில் மின்சார ரயிலை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் அப்புறப் படுத்தப் பட்டனர். திருத்தணி-சென்னை செல்லும் மின்சார ரயிலை மறித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
இதனிடையே, தமிழகத்தின் நிலை குறித்து, ஆளுநருடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சந்தித்துப் பேசினார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில், ஆளுநருடன் தமிழிசை சந்தித்துப் பேசினார். பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் . காவிரி விவகாரத்தில் போராட்டம் வன்முறையாக மாறக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார் தமிழிசை.
இதனிடையே இந்தப் போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த ஸ்டாலின், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து செவிசாய்க்காத காரணத்தால் தான் இந்தப் போராட்டமே. மத்திய அரசு செவி சாய்க்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும். காவிரி விவகாரத்தில் அதிமுகவுடன் இணைந்து போராட திமுக தயாராக உள்ளது என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், திமுக.,வின் சார்பில் திடீரென போராட்டங்களில் தலை காட்டியுள்ளார், ஸ்டாலினின் மகன் நடிகர் உதயநிதி ஸ்டாலின். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களில் உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டிருக்கிறார்.