சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக எம்.கே.சூரப்பாவை நியமனம் செய்து ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி, 2016 மே முதல் காலியாக உள்ளது. புதிய துணை வேந்தரை தேர்வு செய்ய, மூன்று முறை தேடல் குழுக்கள் அமைக்கப் பட்டு, துணைவேந்தர் தேர்வுப் பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில், சூரப்பாவை தேர்வு செய்து இன்று நியமனம் செய்து உத்தரவிட்டார் ஆளுநர்.
சூரப்பா, 3 ஆண்டுகளுக்கு துணை வேந்தராக பதவியில் இருப்பார். இவர், இந்திய அறிவியல் மையத்தில் பேராசிரியராக 24 ஆண்டுகளும், ஐ.ஐ.டி., இயக்குனராக 6 ஆண்டுகளும் பணியாற்றியவர்.
முன்னதாக, இவரது நியமனம் குறித்து சர்ச்சை எழுந்தது. இவர் கன்னடர் என்பதால், நியமிக்கப் படக் கூடாது என்று சில அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.