
ஏடிஎம்மில் போலீஸ்காரரிடம் ரூ.20,000 நூதன மோசடி செய்துள்ளார் மர்ம நபர். அதுவும் ஏடிஎம்.மில் பணம் எடுக்க உதவுவது போல் செயல்பட்டு, பணத்துடன் தலைமறைவாகியுள்ளார் அந்த மர்ம நபர்.
விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம்மில் வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் நாகரீக தோற்றத்துடன் மர்ம நபர் ஒருவர் இருந்துளார். அப்போது சீருடை அணியாத போலீஸ்காரர் ஒருவர் பணம் எடுப்பதற்காக ஏடிஎம்.,முக்குச் சென்றுள்ளார்.
அவரது ஏடிஎம்., கார்டை பயன்படுத்தியபோது பணம் வரவில்லை. அதை கவனித்த அந்த நபர், தான் அவருக்கு உதவி செய்வதாகக் கூறி அவருடைய ஏடிஎம் கார்டை வாங்கி இயந்திரத்தில் போட்டுள்ளார். பிறகு, அந்த போலீஸ்காரரிடம் பின் நம்பரை கேட்டு அதனை அந்த நபரே பதிவிட்டுள்ளார். இருப்பினும் பணம் வரவில்லை. என்வே, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் இல்லை என மெஷினில் இருந்து கார்டை எடுத்து திருப்பிக் கொடுத்துள்ளார்.
அவ்வாறு திருப்பிக் கொடுக்கும் போது அந்த நபர் தான் வைத்திருந்த வேறொரு ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். உடனே அருகிலுள்ள வேறொரு ஏடிஎம்முக்குச் சென்ற அந்த நபர், இரண்டு முறை பதிவிட்டு 20 ஆயிரம் பணத்தை அந்த போலீஸ்காரரின் வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துள்ளார்.
சிறிது நேரத்தில் அந்த போலீஸ்காரரின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் பணம் எடுக்கப்பட்ட விவரம் வந்ததும் அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர், தன் பர்சில் உள்ள ஏடிஎம் கார்டை எடுத்துப் பார்த்தபோது அது போலி என தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், வங்கி மேலாளரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார்.
போலீஸ்காரரிடமே ரூ.20 ஆயிரம் அபேஸ் செய்த மர்ம ஆசாமியை வங்கி ஏடிஎம்.,மில் பதிவாகியிருக்கும் உருவத்தை வைத்து கண்டுபிடித்து விடலாம் என்று கூறியுள்ளனர். இது விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



