
சென்னை: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக, தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.
உச்ச நீதிமன்ற வழிகாட்டலின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக, தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீது திங்கள்கிழமை ஏப்.9ஆம் தேதி விசாரணை நடைபெறுகிறது. இந் நிலையில், வழக்கறிஞர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.
இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படவிருக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசு சார்பில் ஆஜராகவுள்ள சேகர் நாப்தே தலைமையிலான 6 பேர் குழுவும் கலந்து கொண்டது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கின்போது, உச்சநீதிமன்றத்தில் எடுத்துவைக்கப்பட வேண்டிய வாதங்கள் குறித்து, வழக்கறிஞர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.



