சென்னை ஜெ.ஜெ. நகர் உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக, லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்திற்குள் நேற்றிரவு அதிரடியாக நுழைந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், அங்குள்ள உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது, உதவி ஆணையர் கமில்பாஷா மற்றும் அவரது நண்பர் ஒருவரும் அலுவலகத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த சோதனையில் அலுவலகத்தில் இருந்த இரண்டரை லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. உதவி ஆணையர் கமில்பாஷாவின் நண்பரிடம் இருந்த 2 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
இப்படித்தான் செய்திகள் நேற்றைய இரவு சோதனை குறித்து வெளிவந்தது. ஆனால், இந்த செய்தியின் பின்னணியில் வேறு விவகாரம் இருப்பதாக காவலர்களே கிசுகிசுத்தனர்.
திருமங்கலம் உதவி ஆணையாளர் கமீல்பாஷா, லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகப் பிடிப்பட்டார் என்றும், இந்த உண்மையை லஞ்ச ஒழிப்புத் துறையினரே மறைப்பதாகவும் பேசப்படுகிறது.
ஏப்ரல் 13ஆம் தேதி இரவு 10.30 மணியில் இருந்து ஏப்.14 அதாவது இன்று அதிகாலை 3 மணி வரை டிஎஸ்பி., லவகுமார் தலைமையில் வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் (CC2 Team) ஜே.ஜே. நகர் காவல் நிலையத்தின் மேல் உள்ள திருமங்கலம் உதவி ஆணையாளர் கமீல் பாஷாவின் அறையில் இருந்து கணக்கில் வராத ரூ.2.5லட்சம் பணத்தையும், சோதனையின் போது உதவி ஆணையர் அறையில் இருந்த கொடுங்கையூர் பில்டர் செல்வம் (இவர், உதவி ஆணையரைப் பார்க்க வந்ததாகக் கூறுகிறார், நண்பர் என்றும் கூறப்படுகிறது) என்பவரிடம் இருந்த ரூ.2,58,500 பணம் ஆக மொத்தம் ரூ 5,08,500 பணத்தைக் கைப்பற்றிச் சென்றனர்.
ஆனால், இது குறித்த முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்றும், பணம் உதவி ஆணையர் அலுவலகத்தில் கைப்பற்றப்பட்டது தொடர்பாக ஜே.ஜே.நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாண்டியராஜனை (2011 பேட்ச்) லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்தனர் என்றும், இவர் உதவி ஆணையரின் ஸ்பெஷல் டீம் எஸ்.ஐ., ஆக உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, யாரும் கைது செய்யப்படவில்லை. உண்மையில் கமீல்பாஷா, பில்டர் செல்வத்திடமிருந்து பணம் வாங்கும் போது கையும், களவுமாகப் பிடிபட்டுள்ளாராம்.
ஆனால் சென்னையில் லஞ்சம் வாங்கும் போது, உதவி ஆணையர் பிடிபட்டார் என்ற செய்தி பரவினால், சென்னை மாநகர போலீசார் மீது அதிருப்தி ஏற்படும் என்பதால், பல உண்மைகள் மறைக்கப்படுவதாக காவலர்களே அதிருப்தியுடன் பேசிக் கொண்டிருக் கின்றனராம்!