
சென்னை: நாம் தமிழர் கட்சியினரை மிரட்டுவதை போலீஸார் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “அன்றைய போராட்டத்தின் போது காவலர்களைத் தாக்கியவர்கள் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் இல்லை. காவலர்களைத் தாக்கியது தவறு; போராடுபவர்களை காவலர்கள் தாக்குவதும் தவறு” என்றார்.
மேலும், “காவலர்களைத் தாக்கிய காரணத்தால், தமிழகம் முழுவதும் உள்ள நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்படுகின்றனர். நாம் தமிழர் கட்சி வன்முறைக் கட்சி இல்லை. நாங்கள் என்ன போலீசாரை தாக்குவதற்குத்தான் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறோமா?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, “காவிரிக்காக ஐபிஎல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினோம். போராட்டத்தில் திடீர் தாக்குதல் ஏற்பட்ட போது, நான் தான் தாக்கினேன் என்றும், திட்டமிட்டு கொலை முயற்சி செய்கிறோம் என்றும் பொய் வழக்கு போடப்பட்டது.” என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்.
“யார் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பதை காவல்துறைதான் கண்டறிந்து நடவடிக்கை வேண்டும் என்று கூறிய சீமான், ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் போலீசாரைத் தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் இல்லை என்று அடித்துக் கூறினார்.
மேலும், “நாம் தமிழர் கட்சியினரை போலீசார் மிரட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டு. நாம் தமிழர் கட்சியினரை குற்றவாளிகளாக்குவது தவறானது. போராட்டத்தின் போது போலீசை தாக்கியது யார் என்றே தெரியவில்லை என்று கூறிய சீமான், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொண்டர்களை கைது செய்ய வேண்டாம்; என்னை வேண்டுமானால் கைது செய்யுங்கள் என்று கூறினார்.
அன்றைய தினம் ஐபிஎல் போட்டியின்போது, ரசிகர்கள் மற்றும் காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தவறானது என்று கூறினார் சீமான்.

சீமான் இன்று இப்படிச் சொன்னாலும், ஏப்ரல் 11ஆம் தேதி சொல்லப்பட்ட விஷயமே வேறு. நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல் நடத்தவில்லை என்று ஒருபுறம் சொல்லிக் கொண்டிருந்தாலும், ரஜினி டிவிட்டர் பதிவில், காவலர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த போது, ரஜினியை தரக்குறைவாகத் தாக்குவதாக எண்ணிக் கொண்டு, காவலர் மீது அந்த இளைஞர் தாக்குதல் நடத்தியதை நியாயப் படுத்தி மறுபுறம் நாம் தமிழர் கட்சியினர் பேட்டி கொடுத்து, அவை செய்தி ஊடகங்களில் வெளிவந்தன.
நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவான இணையதளங்கள், செய்தி ஊடகங்களில், ரஜினி வெளியிட்ட வீடியோவைப் போட்டு, இந்தத் தகவல் குறிப்பிடப் பட்டது. “காவலர் தாக்கப்பட்ட வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ரஜினிகாந்த், போலீசார் தாக்கப்பட்டதற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மக்களோடு நிற்க வேண்டிய ஒரு தலைவர், சீருடை அணிந்த காவலர்களுக்கு சாதகமாக கருத்துத் தெரிவித்திருப்பதை பலரும் ஏற்கவில்லை. இந்த நிலையில், அந்த இளைஞர் ஏன் போலீசாரைத் தாக்கினார் என்ற விவரம் கிடைத்துள்ளது. நேற்றைய போராட்டத்தின்போது நாம் தமிழர் தலைவர் சீமானும் களத்தில் இருந்தார். அண்ணா சாலையில் அவர் பெரும் இளைஞர் கூட்டத்துடன் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தபோதுதான், போலீசார் தடியடியில் இறங்கினர்.
ஒரு கட்டத்தில் சீமானை அடிக்க முயன்றனர் இரண்டு போலீசார். ரஜினி வெளியிட்ட வீடியோவில் சில நிமிடம் முன் சென்று பார்த்தால் அது தெரியும். சீமானை அடிக்க வந்தவர்களில் ஒரு போலீசைத்தான் அந்த இளைஞர் தள்ளிவிட்டார். “எங்க அண்ணன் மேலயே கை வைப்பியா நீ..?” என்று கேட்டபடி அந்த போலீஸ் முகத்தில் குத்த முயன்றார் இளைஞர். அதன் பிறகு சீமான் ஓடி வந்து, கை கலப்பை விலக்க, அந்த இளைஞர் போராடும் கூட்டத்தில் கலந்துவிட்டார். நடந்த சம்பவம் இதுதான்.
“ரஜினி களத்தில் இறங்கி போராடும் போது, போலீசார் சீருடையில் தடியோடு அடிக்க வந்தால், அவர் ரசிகரின் மனநிலை எப்படி இருக்குமோ, அதுதான் நேற்று அந்த இளைஞனின் மனநிலை,” என்கிறார்கள் நாம் தமிழர்கள்!”
– இன்று சீமான் சொன்னதில் உண்மை இருக்கிறதா? அல்லது ஏப்.11 அன்று சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் சொன்னதில் உண்மை இருக்கிறதா? போலீஸாருக்கே வெளிச்சம்!
ரஜினி வெளியிட்ட வீடியோவில் காணப் பட்டது போல், போலீஸாரைத் தாக்கிய அந்த இளைஞர் உடனடியாக உடன் இருந்தவர்களால் பத்திரமாக ரவுண்ட் அப் செய்யப் பட்டு, அந்தக் களத்தில் இருந்து கூட்டத்தில் கலந்து வெளியேறச் செய்யப் பட்டார். அதை அடுத்தே போலீஸார் அந்தப் பகுதிக்கு வந்தனர். தொடர்ந்து அருகே நின்றிருந்த சீமானிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கூட்ட நெரிசலில் தப்பிப் போன அந்த இளைஞர் குறித்துப் பேசியுள்ள சீமான், அவர் எங்கள் கட்சித் தொண்டர் இல்லை என்று இன்றும், சீமான் மீது தாக்குதல் நடத்த முற்பட்டதால் அந்த இளைஞர் போலீஸாரைத் தாக்கினார் என்று அன்றும் கூறப்பட்டது. இப்படி, போலீஸார் மீது கைவைக்க நியாயவாதம் கற்பிக்க முயலும் சீமான் போன்றவர்கள் அறிவுரை கூறித் திருத்தப் பட வேண்டியவர்கள் அல்லர்!




