சென்னை: பாஜக., மகளிர் அணி நிர்வாகி ஜெஸ்ஸி முரளிதரனை நிர்மலா தேவி என்று இட்டுக் கட்டி, அந்தப் படத்தை முகநூல் உள்ளிட்ட சமூகத் தளங்களில் பகிர்ந்து கொண்டு, அவற்றை நீக்க வேண்டும் என்றால் ரூ.5 லட்சம் தரவேண்டும் என்று பேரம் பேசியவர்கள் குறித்து காவல்துறை ஆணியரிடம் புகார் அளிக்கப் பட்டுள்ளது.
இது தொடர்பாக பாஜக., தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஓமாம்புலியூர் ஜெயராமன், நேற்று காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்து புகார் மனு அளித்தார். பாஜக.,வில் உள்ள பெண்களைப் பற்றி தவறாகச் சித்திரித்து முகநூல் உள்ளிட்ட சமூகத் தளங்களில் செயல்படுபவர்கள் குறித்து புகார் மனு அளிக்கப் பட்டது. அந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் ஆணையர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என்று ஜெயராமன் செய்தியாளரிடம் கூறினார்.
அவர் காவல் ஆணையரிடம் அளித்துள்ள புகார் மனுவில்,
நான் பாஜக., தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் உள்ளேன். அண்மைக் காலமாக இந்திய அரசின் உயர் பதவிகளில் உள்ள தலைவர்கள் மீதும், பாஜக.,வைச் சேர்ந்த பெண் தலைவர்கள் மீதும் மிகவும் கொச்சையான, அருவருக்கத்தக்க, அச்சில் ஏற்ற முடியாத கருத்துகள் மற்றும் படங்கள் வேண்டுமென்றே சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பரப்பப்பட்டு வருகிறது. இது சமூக விரோத விஷமிகளால் செய்யப்படும் ஒரு திட்டமிட்ட குற்றமாகும்.
Vignes Waran, Ravan Shudras, அரசியல் விமர்சனம் மட்டும், Political Comment’s only, VV Live TV, நக்கல் மன்னன் 2.0, கேபிள் இரமேஷ், V.Richard Topaz, முகநூல் முஸ்லீம் மீடியா, இராமநாதபுரம் மாவட்ட செய்திகள், Rajesh Murugesan, நெஞ்சுக்கு நீதி(Whatsapp) ஆகிய Facebook, Whatsapp பக்கங்களில் பிரதமர், தமிழக ஆளுநர், மத்திய அமைச்சர் ஆகியோரை கொச்சைப் படுத்தி வீண் அவதூறுகளைப் பரப்பும் வகையிலான படங்களும், கருத்துகளும் பதிவிடப்பட்டு பரப்பப் பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், பாஜக.,வைச் சேர்ந்த பெண் தலைவர்களை மிகவும் ஆபாசமாகவும் கொச்சைப்படுத்தியும் பெண் இனத்தின் மாண்பையே குலைக்கும் வகையிலும், பெண் வன்கொடுமை செய்யும் வகையிலும் பல்வேறு படங்களையும் கருத்துகளையும் பதிவேற்றி உள்ளார்கள். மேற்குறிப்பிட்டுள்ள விக்னேஸ்வரன் என்ற முகநூல் பக்கம், காவல் துறையைச் சேர்ந்தவரின் பக்கம் ஆகும். அவர், 28 அக்டோபர் 2017ல் இருந்து TamilNadu Police Armed Reserved Constable ஆகப் பணியில் உள்ளார்.
இவரது பதிவில் பிரதமர், பாஜக., மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோரை மிகவும் ஆபாசமாக சித்திரித்து பதிவேற்றியுள்ளார். காவல் துறையைச் சேர்ந்த ஒருவரே இப்படி ஒரு அருவறுப்பான குற்றத்தை, அதுவும் பிரதமரை கொச்சைப்படுத்தி அவதூறு பரப்பும் செயலைச் செய்வது எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளித்துள்ளது.
மேற்குறிப்பிடப் பட்டவர்களின் சமூக வலைத்தளப் பதிவுகள் கொச்சையானதாகவும் அருவறுக்கத்தக்க சித்திரிப்புகளைக் கொண்டதாகவும் இந்தியத் தலைவர்களை கொச்சைப்படுத்தி அவதூறு பரப்புவதாகவும் பெண் வன்கொடுமை செய்யும் வகையிலும், ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் மனத்தை புண்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், ஒரு குறிப்பிட்ட பிரிவினரைத் தூண்டி கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.
எனவே, மேதகு காவல் துறை ஆணையர் மேற்கண்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை உடனடியாக எடூத்து பொது அமைதியையும் காவல் துறையின் கண்ணியத்தையும் காக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்….
– என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, குறிப்பிட்ட அரசியல் கட்சியைச் சார்ந்து சமூக வலைத்தளங்களில் இயங்குபவர்கள், பாஜக.,வில் உள்ள பெண்களைக் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர் என்று குற்றம் சாட்டப்பட்டது. நடிகை காயத்ரி ரகுராம் குறித்து மிகவும் கேவலமான முறையில் அவதூறு பரப்பினார்கள். அதனைக் கண்டு மனம் நொந்த காயத்ரி, தாம் அமெரிக்காவில் இருப்பதாகவும், தன்னை சென்னையில் கைது செய்ததாக ஒரு அவதூறு பரப்புகிறார்கள் என்றும், பாஜக.,வில் இருப்பதற்காக தன்னை இவ்வாறெல்லாம் அவதூறு செய்பவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
இதுகுறித்த அவரது டிவிட்டர் பதிவு:
— Gayathri Raguramm (@gayathriraguram) April 16, 2018
இந்நிலையில், பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், பாஜக.,வைச் சேர்ந்த வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோரும் தரம் தாழ்ந்து தங்களை விமர்சிப்பவர்கள் குறித்து அதிருப்தி வெளியிட்டனர்.
ஆனால், இவர்கள் எழுப்பிய அபயக் குரல் எதுவும் காவல் துறைக்கோ, சமூகத்துக்கோ கேட்கவே இல்லை. மாறாக, பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா போட்ட டிவிட்டர் பதிவு ஒன்று, தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஹெச்.ராஜா தாம் பதிவு செய்த அந்த டிவிட்டர் பதிவுக்கு முன்னதாக, பாஜக.,வின் ஜெஸ்ஸி முரளிதரன் குறித்த மோசமான பதிவுகளுக்கு கண்டனம் தெரிவித்தார். அதுவும் எவர் கவனத்தையும் ஈர்க்கவில்லை என்கிறார்கள்.
இதனால், பாஜக.,வினர் தங்கள் கருத்துகளைக் கேட்கச் செய்வதற்கு இதுதான் சமூக விரோதிகளுக்குப் புரிந்த மொழி என்ற நிலைக்கு பாஜக.,வினர் வருவதற்கு காவல் துறை வழிசெய்யாமல் இருக்க வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கையை காவல் துறையின் சைபர் க்ரைம் பிரிவு உடனடியாக எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஹெச்.ராஜா தெரிவித்த கண்டனப் பதிவு…
VV live TV மற்றும் வி சி க வை சார்ந்த Richard Topaz ஆகியோர் பா ஜ க வின திருமதி் ஜெசி முரளிதரன் அவர்கள் படத்தை போட்டு நிர்மலா தேவி என்று பொய் பரப்பி வருகின்றனர். மேலும் சம்மந்தப்பட்ட TV மிரட்டி பணம் கேட்பதாகவும் தகவல். காவல்துறை உடனடியாக இவர்களை கைது செய்ய வேண்டும்.
VV live TV மற்றும் வி சி க வை சார்ந்த Richard Topaz ஆகியோர் பா ஜ க வின திருமதி் ஜெசி முரளிதரன் அவர்கள் படத்தை போட்டு நிர்மலா தேவி என்று பொய் பரப்பி வருகின்றனர். மேலும் சம்மந்தப்பட்ட TV மிரட்டி பணம் கேட்பதாகவும் தகவல். காவல்துறை உடனடியாக இவர்களை கைது செய்ய வேண்டும்.
— H Raja (@HRajaBJP) April 17, 2018