செவ்வாய்க்கிழமை நேற்று நடந்த ஆளுநரின் பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த பின்னர், ஒரு கேள்வி கேட்ட பெண் நிருபரின் கன்னத்தில் ஆளுநர் தட்டியதாக சர்ச்சை எழுந்த நிலையில், சம்பந்தப் பட்ட நிருபர் எழுதிய ஈமெயிலுக்கு தனது வருத்தத்தைத் தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறார் ஆளுநர்.
பத்திரிகையாளர் சந்திப்பின்போது பெண் பத்திரிகையாளரை கன்னத்தில் தட்டியதாக சர்ச்சையில் சிக்கிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சம்பந்தப்பட்ட பத்திரிகையாளருக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறார். அதில் தனது நடவடிக்கை குறித்தும் விளக்கம் அளித்திருக்கிறார்.
அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்ட நிலையில் அவரது ஆடியோ பேச்சு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டார். இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செவ்வாய்க்கிழமை ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பு நிறைவடையும்போது, பெண் நிருபர் ஒருவர் ஆளுநரிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதற்கு பதிலளிக்காமல் ஆளுநர் அந்தப் பெண் நிருபரின் கன்னத்தைத் தட்டினார். தன்னுடைய கேள்விக்கு பதிலளிக்காமல் ஆளுநர் கன்னத்தை தட்டியது குறித்து அவர் ட்விட்டரில் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இதை அடுத்து, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு வருத்தம் தெரிவித்து ஆளுநர் கடிதம் எழுதினார். அதில் தனது நடவடிக்கை குறித்தும் விளக்கம் அளித்திருக்கிறார்.
அதில், 18.04.2018 தேதியிட்டு எனக்கு உங்களிடமிருந்து ஒரு இமெயில் வந்துள்ளது. நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பு முடியும் தருவாயில் நான் எழுந்து செல்லவிருந்த வேளையில் நீங்கள் ஒரு கேள்வி எழுப்பினீர்கள். எனக்கு அந்தக் கேள்வி பிடித்திருந்தது. அதற்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில் எனது பேத்தி நிலையில் எண்ணியே நான் தங்கள் கன்னத்தைத் தட்டினேன்.
40 ஆண்டு காலமாக நானும் பத்திரிகையாளராக இருந்தேன் என்ற முறையிலேயே உங்களது பணித் திறனைப் பாராட்டும் வகையில் அவ்வாறு செய்தேன். உங்கள் இமெயில் மூலம், நீங்கள் அந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தேன். உங்கள் உணர்வுகளுக்கு மன்னிப்பளித்து நடந்த சம்பவத்துக்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதற்காக மன்னிப்பு கோருகிறேன்.” – என்று குறிப்பிட்டிருந்தார்.
கடிதத்துக்கு இ மெயில் மூலம் பதில் எதிர்பார்ப்பதாக ஆளுநர் கோரியிருந்ததால், அதற்கு பதில் அளிக்கும் வகையில், ஆளுநரின் வருத்தத்தை ஏற்றுக் கொள்வதாகக் கூறியுள்ள அந்தப் பெண், ஆனால் அதற்கான காரணம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: மாண்புமிகு ஆளுநருக்கு, உங்களது மன்னிப்பினை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதே சமயம் நான் கேட்ட கேள்விக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக நீங்கள் நடந்து கொண்டதாக கூறுவது சரி இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Your excellency I accept your apology even though I am not convinced about your contention that you did it appreciate a question I asked https://t.co/NNs13wNqNE
— Lakshmi Subramanian (@lakhinathan) April 18, 2018






