
சென்னை: மெரினாவில் போராட்டம் நடத்த எவருக்கும் அனுமதி இல்லை என காவல் ஆணையர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, சென்னை மெரினா கடற்கரையில் 90 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா, இது தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவி்ட்டிருந்தார்.
இந்த வழக்கில் காவல் ஆணையர் தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியன் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘‘மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி கிடையாது. 90 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க எவரையும் அனுமதிக்க முடியாது. பெரிய அரசியல் கட்சிகளுக்குக்கூட ஒருநாள் மட்டுமே உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே, வள்ளுவர் கோட்டம், காயிதே மில்லத் மணி மண்டபம், சேப்பாக்கம் ஆகிய இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் காலை முதல் மாலை வரை மனுதாரர் உண்ணாவிரதம் நடத்த அனுமதியளிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து வழக்கு விசாரணையை தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.



