ஆளுநர் பதவியை வெறும் ரப்பர் ஸ்டாம்ப் என்றும், பட்டமளிப்பு விழாக்களில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டிய ஒரு அலங்காரப் பதவி என்றும் திமுக., உள்ளிட்ட தமிழகத்தில் ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் கூறி வருகின்றன. ஆனால், அண்மைக் காலமாக ஆளுநர் மெற்கொண்ட செயல்பாடுகள் திராவிடக் கட்சிகளிடையே அடிவயிற்றைக் கலக்கி நெஞ்சத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். அதனை சர்ச்சை ஆக்கி குளிர் காய்ந்தார்கள் திமுக.,வினர்.
திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏன் ஆளுநர் மேற்கொண்ட ஆய்வுகளை எதிர்க்கிறார்கள் என்பது குறித்து பொதுமக்களே தெளிவாகக் கருத்து தெரிவிக்கிறார்கள். தமிழகம் என்றோ ஊழல் மயமாகிவிட்டது. வார்டு உறுப்பினர் கூட வாரிச்சுருட்டி சொத்து சேர்க்கும் ஊழல் மய அரசியலை திராவிடக் கட்சிகள் இங்கே ஏற்படுத்தியுள்ளன. எந்த ஒரு வேலைக்கும் லஞ்சம் வாங்குவது ஒரு புறம் இருந்தாலும், பொதுவாக இந்தக் கட்சிக்காரர்கள் பெருமளவு பணத்தை கொள்ளை அடிப்பது காண்டிராக்ட் – அதாவது ஒப்பந்தப் பணிகள் மூலம்தான். சாலை போடுவது, கட்டடம் கட்டுவது, குளம் கால்வாய் என்று பராமரிப்புப் பணிகள் உள்ளிட்ட அரசின் அனைத்து திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை கட்சிக்காரர்களே எடுக்கின்றனர். அவர்கள் இதற்கான கமிஷன் தொகையை, பொதுப்பணித் துறை தொடங்கி, உள்ளூர் வருவாய், காவல் அதிகாரிகளிடம் இருந்து, கட்சி மேலிட பொறுப்பாளர்கள் வரை லஞ்சம் கொடுக்கின்றனர். இவற்றை எவரும், எந்தத் துறையும் கண்காணிப்பதில்லை.
தமிழகத்தில் ஊழலுக்கு எதிரான கண்காணிப்பு அமைப்புகளிலேயே ஊழல் புரையோடிப் போயுள்ளது. ஒப்புக்கு வெறும் கண் துடைப்புக்காக சில நடவடிக்கைகள் எடுக்கப் பட்டாலும், அவையும் கூட லஞ்சங்களால் நீர்த்துப் போகின்றன. இங்கே லோக் ஆயுக்த உள்ளிட்ட எந்த அமைப்பும் இல்லை. இந்த நிலையில்தான், ஆளுநர் மத்திய நிதியில் இருந்து கட்டப்பட்ட ஸ்வச் பாரத் – தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிப்பறைகள் எவ்வாறு கட்டப் பட்டுள்ளன, கட்டடங்கள் தரம் வாய்ந்தனவாக உள்ளனவா? முறைகேடுகள் நடந்திருக்கின்றதா? என்றெல்லாம் ஆய்வு செய்வதாகக் கிளம்பினார். இது திமுக., அதிமுக., உள்ளிட்ட திராவிடக் கட்சியினருக்கு பெரும் இடியாக அமைந்தது.
தாங்கள் ஊழல் செய்யும் சுதந்திரப் போக்கில் ஆளுநர் தலையிடுகிறாரே என்று எரிச்சல் அடைந்தனர். அடுத்து, பல்கலை., துணைவேந்தர் நியமனத்தில் கோடிக் கணக்கில் லஞ்சம் விளையாடியது. கோவை பாரதி பல்கலை ., துணைவேந்தர் பிடிபட்டார். தொடர்ந்து அனைத்து பல்கலை.,களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றார் ஆளுநர். இந்நிலையில் அண்ணா பல்கலை., துணைவேந்தரை தகுதி அடிப்படையில் நியமித்தார். ஆனால் லஞ்சம் கொடுத்து துணைவேந்தர் பதவியைப் பிடித்து மேலும் மேலும் முறைகேடுகளைச் செய்யலாம் என்று காத்திருந்த சிலர், இதனால் ஏமாற்றம் அடைந்தனர்.
இதனால்தான் அவருக்கு கருப்புக் கொடி, எதிர்ப்பு என்று இறங்கியுள்ளனர். ஆளுநரை தமிழகத்தை விட்டே மாற்றச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டே, ஒரு புலனாய்வுப் பத்திரிகையில் தென் மாநில ஆளுநர் ஒருவர் பாலியல் முறைகேட்டில் சிக்குவார் என்று உளவுத் துறை கூறியதாக ஒரு செய்தியை முன்னரே வெளியிடச் செய்தனர். தொடர்ந்து, ஆளுநரை இங்கிருந்து அப்புறப் படுத்த போராட்டங்களை நடத்தி வருகின்றனர்… – என்று தெளிவாக கூறுகின்றனர் பொது இடங்களில் விவாதங்களை மேற்கொள்ளும் மக்கள்.
இந்த நிலையில், தன் மீது ஊடகங்கள் மூலம் எதிர்க்கட்சிகள் எழுப்பும் சர்ச்சைகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தே ஊடகங்களில் விளக்கம் அளித்தார். அதில், ஆளுநரின் உரிமைகள் என்ன? என்பது குறித்து அவர் அளித்த விளக்கங்கள் இவை…
மாவட்டங்களில் நான் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு செய்வதை சிலர் விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்களுக்கு ஆளுநர்தான் மாநிலத்தின் தலைமை செயல் நிர்வாகி என்பது தெரியவில்லை. சட்டசபையில் நிறைவேற்றப்படும் அனைத்து சட்ட மசோதாக்களுக்கும் இறுதியில் ஒப்புதல் வழங்குவது ஆளுநர்தான். இது மிகப்பெரிய பொறுப்பாகும்.
தமிழ்நாட்டின் கலாச்சாரம், புவியலமைப்பு, ஆறுகள், தொழில்கள், விவசாயிகள், மக்களின் வாழ்க்கை தரம் போன்றவற்றை நான் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். மாநிலத்தின் தலைமை பொறுப்பாளர் என்ற வகையில் இது அவசியமாகும். தனிப்பட்ட முறையில் மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செய்யாமல் இதை சாதிக்க முடியாது. நான் மாவட்டங்களில் ஆய்வு செய்யும் போது 25 முதல் 30 அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். அவர்களிடமிருந்து நான் தகவல்களை பெறுகிறேன்.
அவர்களை நான் கடிந்து கொள்வதில்லை. அவர்களிடம் தவறுகளை காண்பதில்லை. அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அப்படியிருக்கும் போது நான் மாநில அரசின் நிர்வாகத்தில் குறுக்கிடுவதாக எப்படி சொல்ல முடியும். மாவட்ட சுற்றுப் பயணங்களின்போது நான் ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் சமயங்களில் அதிகாரிகளை உற்சாகப்படுத்துகிறேன். அதிகாரிகளின் வாழ்க்கை மற்றும் பணிகள் திறந்த புத்தகமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறேன்.
அலுவலகங்களுக்கு வரும் போது சரியான நேரத்திற்கு வாருங்கள். கோப்புகளை உடனுக்குடன் பார்த்து அனுப்புங்கள் என்றுதான் சொல்கிறேன். கடவுளுக்கு பயந்து செயல் ஆற்றுங்கள். லஞ்சம் வாங்காதீர்கள் என்கிறேன். லஞ்சம் வாங்கினால் அது குடும்பத்துக்கு தீமையாக முடிந்து விடும் என்றுதான் அறிவுறுத்தி விட்டு வருகிறேன்.
எனது இந்த பணிகளை நான் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை அழைத்து விளக்கமாக தெரிவித்து உள்ளேன். நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்ற அதிகாரிகளிடமே அவர் இதை கேட்டு தெரிந்து கொண்டு இருக்கலாம். ஆனால் அதில் அவருக்கு விருப்பம் இல்லை. அவர் தனக்கென்று சில கருத்து உரிமைகளை வைத்துள்ளார். அதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
எனக்கு எதிராக கருப்பு கொடி போராட்டத்தை தி.மு.க.வினர் தொடர்ந்து நடத்துகிறார்கள். அது அவர்களின் பழக்கமாகி விட்டது. என்னை திட்டுவதன் மூலம் ஓட்டுக்களை அதிகரித்து கொள்ளலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் அளவுக்கு நான் இறங்கி செல்ல மாட்டேன். ஆளுநர் என்ற முறையில் எனக்குரிய கண்ணியத்தை பேணி பாதுகாப்பேன்.
தி.மு.க.வின் போராட்டத்துக்காக நான் எனது மாவட்ட ஆய்வு பணிகளை நிறுத்தப்போவதில்லை. தொடர்ந்து நிச்சயமாக மாவட்டம் தோறும் சென்று ஆய்வு பணிகளை மேற்கொள்வேன். நான் ஏன் ஆய்வு பணிகளை நிறுத்த வேண்டும்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எனது மாவட்ட ஆய்வு பணிகளை நன்கு புரிந்து கொண்டு இருக்கிறார். எனவே பிரச்சனை இல்லை. எதிர்க்கட்சியினர்தான் எனக்கு கருப்பு கொடி காட்டுகிறார்கள். அதை நான் ஜீரணித்துக் கொண்டிருக்கிறேன். ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டும் எதிர்க்கட்சியினர் ஒரு விஷயத்தை மறந்து விட்டனர். அவர்கள் ஆளுநரை அவமரியாதை செய்கிறார்கள். இது கிரிமினல் குற்றமாகும். கருப்பு கொடி காட்டும் அவர்களை கைது செய்ய முடியும். ஆனால் நான் அவர்களை கண்டுகொள்ளாமல் சென்று கொண்டிருக்கிறேன்.
அசாமில் நான் ஆளுநராக இருந்தபோது நான் மேற்கொண்ட பணிகள் பாராட்டுகளை பெற்றன. அதனால்தான் எனக்கு தமிழக ஆளுநர் பொறுப்பை தந்து இருக்கிறார்கள் என்று கருதுகிறேன். அசாமில் 1½ ஆண்டுகள் ஆளுநராக இருந்தபோது நிறைய பணிகள் செய்துள்ளேன். அவர்களுக்கு வழிகாட்டி உள்ளேன். அங்கு ஆட்சியாளர்கள் இதை விரும்பாவிட்டால் என்னை எதிர்த்து இருப்பார்கள்.
ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு சுகமாக நேரத்தை கழிக்க நான் ஒருபோதும் விரும்புவது இல்லை. அது என் குணமும் அல்ல. கடந்த 6 மாதங்களில் 5 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதை கல்வியாளர்களும், பத்திரிகையாளர்களும் வரவேற்று உள்ளனர். சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் மட்டும் தான் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் இந்த சர்ச்சை அதிகரித்துள்ளது. ஆனால் அவர் முழுக்க முழுக்க தகுதி அடிப்படையில்தான் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
நான் ஆளுநராகவும், வேந்தராகவும் இரண்டு பொறுப்புகளை வகிக்கிறேன். ஆளுநராக எனக்கு அமைச்சரவை உதவி செய்யும். ஆனால் வேந்தர் விஷயத்தில் நான்தான்..! எனக்குத்தான் அதிகாரம் உள்ளது. அந்த அடிப்படையில்தான் நான் செயல்படுகிறேன். வேந்தராக இருப்பவர் ஒரு பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்கும் போது அமைச்சர்களிடம் ஆலோசிக்க வேண்டியதில்லை. அதுபோல துணைவேந்தரை நியமிக்கும் விஷயத்தில் மாநில அரசு தலையிடவும் முடியாது. இதுதான் உண்மை நிலை. மக்களுக்கு இது தெரியவில்லை.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்துள்ள விவகாரம் பற்றி விசாரிக்க நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்பதற்காக சந்தானம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு உதவி செய்ய மேலும் 2 பெண் பேராசிரியைகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் நான் திறந்த புத்தகமாக உள்ளேன். இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. சந்தானம் கமிட்டி அறிக்கை வந்ததும் அரசிடம் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் தினமும் போராட்டம் நடப்பதாக சொல்கிறார்கள். ஜனநாயக முறைப்படி அமைதியாக போராட்டம் செய்ய மக்களுக்கு உரிமை உள்ளது. தமிழக அரசு மீது இதுவரை யாரும் என்னிடம் ஊழல் புகார் தரவில்லை. நான் தமிழகத்தில் கடந்த 6 மாதமாக உள்ளேன். இங்கு நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.
18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு பற்றி எனக்கு முழுமையாக தெரியும். இதில் எப்படி தீர்ப்பு வரும் என்று யாரும் கணிக்க முடியாது. இந்த விஷயத்தை பொறுத்தவரை நான் சட்டப்படி செயல்படுவேன். அதில் சமரசத்துக்கு இடமே இல்லை. ஏனெனில் இழப்பதற்கு என்னிடம் ஏதும் இல்லை.