தமிழகத்துக்கு எதிரான கூட்டுச்சதிகளில் அதிமுகவும் பாஜகவும் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படுகின்றன என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இன்று அதிமுக.,வின் நாளேடான டாக்டர் நமது அம்மாவில் வெளியான கட்டுரை ஒன்றில், பாஜக., அதிமுக., இரண்டும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இணைந்து செயல்பட காலம் கனிந்துவருவதாகக் கூறப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக மு.க.ஸ்டாலின் கூறியபோது, இரண்டும் கூட்டுச் சதியில் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக செயல்படுவதாக கூறினார். புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட காமராஜபுரம் பகுதியில் பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்த ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “அதிமுகவும், பாஜகவும் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படுவது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மைதான். ஆனால், எந்த வகையில் என்றால், இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படுவது எதில் ஏழை – எளிய, கிராமப்புற மக்கள் மருத்துவக் கல்வியை பெற முடியாத வகையில் நீட் தேர்வை கொண்டு வந்ததில் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட்டு இருக்கின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், அதை அமைக்க முடியாது என மத்திய அரசு பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு துணையாக இருந்து தமிழக அரசு இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.
தமிழக அரசு செய்யும் கொள்ளைகளுக்கு, ஊழல்களுக்கு, மத்திய அரசு துணையாக இருந்து இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படுகிறது.
வருமான வரித்துறை சோதனைகள் நடந்து முடிந்தும், ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பாஜகவும், அதிமுகவும் சேர்ந்து கூட்டுச்சதியை இரட்டை குழல் துப்பாக்கிகளாக சேர்ந்து செய்திருக்கின்றனர்.
– என்று பேசினார் ஸ்டாலின்.