மதுரை: அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் செல்லத் தூண்டும் வகையில் பேசிய வழக்கில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசியை நிர்மலா தேவியிடம், சந்தானம் குழுவினர் இன்று தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்கலை., வேந்தரான ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தால் நியமிக்கப்பட்ட சந்தானம் குழு, மதுரையில் இரண்டாம் கட்ட விசாரணையை நேற்று தொடங்கியது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை பல்கலை., துணை வேந்தர், பதிவாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், பல்கலைக்கழக அலுவலர்கள் பணியிடமாற்றம் குறித்து விசாரித்தாகவும் விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்தார். மேலும், சிறைத்துறையில் அனுமதி பெற்று நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று அவர் தனது இரண்டாம் கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளார்.
இன்று காலை 9.30 மணி அளவில் மதுரை சிறைக்குச் சென்ற சந்தானம், மற்றும் உதவிக்காக அமர்த்தப் பட்டுள்ள பெண் விசாரணை அதிகாரிகள் தியாகேஸ்வரி, கமலி ஆகியோர் நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் நடத்தும் விசாரணையைப் பதிவு செய்ய வீடியோ கேமராமேன் ஒருவரையும் அவர்கள் உடன் அழைத்துச் சென்றனர்.
முன்னதாக, இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகத் தேடப்பட்டு கைதான பேராசிரியர் முருகனை 5 நாட்கள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது. இந்நிலையில், சிறையில் உள்ள நிர்மலா தேவியிடம் சந்தானம் குழு இன்று விசாரணை நடத்திவருகிறது.
முன்னதாக, பேராசிரியை நிர்மலா தேவியிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் கைதானார். அவரை 5 நாட்கள் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.க்கு சாத்தூர் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. விருதுநகரில் கிளைச்சிறையில் இருந்து பேராசிரியர் முருகனை அழைத்துச் சென்ற சி.பி.சி.ஐ.டி போலீசார், அவர்களின் அலுவலகத்தில் வைத்து நேற்றிரவு முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில், பேராசிரியர் முருகனின் நண்பர் தங்கபாண்டியன், காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குநர் விஜயதுரை ஆகியோரிடமும் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.
இதனிடையே, தலைமறைவாக இருந்த காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். அவரையும் காவலில் எடுக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாத்தூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இதனிடையே, மூன்று மாதங்களுக்கு முன்னர் தங்களிடம் செல்போனில் பேசிய நிர்மலா தேவி, தங்களையும் தவறான பாதைக்கு அழைத்ததாக, மேலும் இரு மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். அவர்களின் சார்பில், விசாரணை அதிகாரி சந்தானத்திடம் புகார் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது.
நிர்மலா தேவிக்கான போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து, அவரை வரும் மே 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.