டி.டி.வி.தினகரனுக்கு மட்டுமே கட்டுப்படுவோம்’ என்று குடும்பச் சண்டையில் பல்வேறு குண்டுகள் வீசப்பட்டுக் கொண்டிருக்க, தன் பங்குக்கு ஒரு புயலைக் கிளப்பியுள்ளார் செந்தில் பாலாஜி.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டி.டி.வி.தினகரனுக்கும் சசிகலாவின் தம்பி திவாகரன் தரப்பிற்கும் பிரச்னை வெடித்துக் கிளம்பி, தற்போதைய அரசியல் களத்தில் தீனி போட்டுக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், தன் பங்குக்கு ஒரு தீனி போட்டிருக்கிறார் தினகரன் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
தினகரனுக்கு மட்டுமே கட்டுப்படுவோம்
தன் விசுவாசத்தை வெளிப்படுத்தும் வகையில், “நாங்கள் தினகரனுக்கு மட்டுமே கட்டுப்படுவோம். வேறு யாரும் எங்களைக் கட்டுப்படுத்த முடியாது” என்று பேசி, மேலும் தூபம் போட்டிருக்கிறார் திவாகரன் தரப்புக்கு!
கரூர் தான்தோன்றிமலை நகர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தெற்கு நகரச் செயல்வீரர்கள் கூட்டம் அங்குள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, “தமிழகத்தில் ஆளுகின்ற அரசு, மத்திய அரசைக் கண்டித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கண்டித்து என்கிற வார்த்தையைகூட ஃபிளெக்ஸ் பேனர்களில் போடவில்லை. ஆனால், `வலியுறுத்தி’ என்கிற வார்த்தையை மட்டும் தமிழகம் முழுவதும் போட்டு, அ.தி.மு.க உண்ணாவிரதம் என்கிற நாடகத்தை நடத்தியது.
பல இடங்களில் எங்கள் அமைப்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் மற்றும் போக்குவரத்து போலீஸாரை வைத்து எங்களுக்கு அனுமதியளிக்காமல் இந்த அரசு வதைத்தது.
தங்கமணி என்ற தகரமணி
நாமக்கலில் நடந்த உண்ணாவிரதத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, ரூ.300 முதல் ரூ.500 வரை கொடுத்ததோடு, பிரியாணியும் அவர் துறை சார்ந்த மது பான வகைகளையும் கொடுத்து சேர்த்த கூட்டத்தை விட, டி.டி.வி.தினகரனுக்குக் கூடிய கூட்டம் அதிகம்.
இந்த அபரிமிதமான கூட்டத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத தங்கமணி என்கிற தகரமணி, தவறான கருத்துகளைக் கூறி வருகிறார்.
ஆஞ்சனேயர் கோயிலில் சத்தியம் செய்வேன்
சசிகலாவினாலும் அவரது குடும்ப உறுப்பினர்களாலும்தான் தங்கமணியும் அவரோடு சேர்ந்த அமைச்சர்களும் முதல்வர் உள்ளிட்டோரும் பதவி வாங்கினர். நான் இதை தங்கமணி ஊரிலேயே உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சத்தியம் செய்து சொல்கிறேன்.
’சசிகலா தரப்பால், தான் பதவி வாங்கவில்லை’ என்பதை அவர் சத்தியம் செய்ய தயாரா?. இந்திய அரசியலமைப்பு வரலாற்று சாசனத்தில் முதன்முறையாக ஆளுகின்ற ஒரு கட்சியின் முதல்வர் உள்பட அனைத்துத்துறை அமைச்சர்களும் வரும் தேர்தலில் டெபாசிட் இழக்கும் வகையில் படுதோல்வியடைவார்கள்.
நாங்கள் டி.டி.வி.தினகரனுக்கு மட்டுமே கட்டுப்படுவோம். வேறு யாருக்கும் கட்டுப்படமாட்டோம்” என்று பேசி முடித்தார்.
அண்மைக் காலமாக, டிடிவி தினகரன் மற்றும் திவாகரன் குடும்பத்துக்கு இடையே குடும்பச் சண்டை, அதிகாரச் சண்டையாகி, இரு தரப்பும் ஒருவரை ஒருவர் செய்த தவறுகள் குறித்து வெளிப்படையாக விமர்சித்து வருகின்றது குறிப்பிடத் தக்கது!