கைதியிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் புழல் ஜெயிலர் ஜெயராமன் மதுரை மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னையை அடுத்த புழலில் சிறைச்சாலை உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட தண்டனைக் கைதிகள், ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள், 150-க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்புப் பணியில் அதிகாரிகள், காவலர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகிறார்கள். ஜெயிலராக ஜெயராமன் உள்ளார். இங்குள்ள கைதிகள் சொகுசாக வாழ அவர்களது உறவினர்கள் சிறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பணம் மற்றும் டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் கைதிகளிடம் செல்போன், கஞ்சா தாராளமாக புழங்கி வந்தன. ரவுடிகள் பலர் சிறையில் இருந்த படியே செல்போன்கள் மூலம் வெளியில் உள்ள தங்களது கூட்டாளிகளுக்கு கட்டளையிட்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர் கதையாக உள்ளது. மேலும் அவ்வப்போது சிறையில் நடக்கும் சோதனையின் போது கைதிகளிடம் செல்போன், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வந்தன.
இந்த நிலையில் புழல் சிறையில் இருந்து ஒரு கைதியை பூந்தமல்லி சிறைக்கு மாற்றாமல் இருக்க ஜெயிலர் ஜெயராமன் மற்றும் சிறைக்காவலர் லஞ்சம் வாங்கியுள்ளனர்.
நெமிலிச்சேரியை சேர்ந்தவர் மிகின் அபுபக்கர். இவரை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு போதைப்பொருள் கடத்தியதாக சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்த மிகின் அபுபக்கரை ஜெயிலர் ஜெயராமன் சந்தித்து பேசினார். அப்போது, ‘‘உன்னை பூந்தமல்லி ஜெயிலுக்கு மாற்ற முடிவு செய்து உள்ளோம். இங்கிருப்பது போல் அங்கு சொகுசாக வாழ முடியாது. உன்னை அங்கு மாற்றாமல் இருக்க வேண் மானால் ரூ. 50 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மிகின் அபுபக்கர் தன்னை வேறு சிறைக்கு மாற்ற வேண்டாம் என்று அதிகாரிகளிடம் கெஞ்சி கேட்டு வந்தாராம். இதனிடையே சில நாட்களுக்கு முன்பு மிகின் அபுபக்கரை அவரது உறவினர் லியோ என்பவர் சந்திக்க வந்துள்ளார். அவரிடம், தன்னை பூந்தமல்லி சிறைக்கு மாற்ற இருப்பதாகவும், இது நடக்காமல் இருக்க ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறுவதாகவும் கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத லியோ இதுகுறித்து சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து புழல் சிறையில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கூண்டோடு பிடிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். டி.எஸ்.பி. குமரகுரு மற்றும் அதிகாரிகளின் யோசனைப்படி ரசாயனத் தூள் தடவிய ரூ. 50 ஆயிரத்தை லஞ்சமாக ஜெயிலரிடம் கொடுக்கும்படி லியோவிடம் கொடுத்து அனுப்பினர்.
அவரும் புழல் சிறைக்கு ரூ. 50 ஆயிரத்துடன் வந்து ஜெயிலர் ஜெயராமனிடம் கொடுக்கச் சென்றுள்ளார். ஆனால் ஜெயராமனோ அந்தப் பணத்தை வாங்க மறுத்து விட்டு, அதனை சிறைக்காவலர் பிச்சையாவிடம் கொடுத்து விடும்படியும் பின்னர் தான் பெற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து பணி முடிந்து சிறைக்கு வெளியே வந்த சிறைக் காவலர் பிச்சையாவிடம் ரூ. 50 ஆயிரத்தை லியோ கொடுத்தார். அதனை பிச்சையா வாங்கிய போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் வேனில் ஏற்றி புழல் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது பல திடுக்கிடும் தகவல்களை பிச்சையா தெரிவித்தார். கைதிகளின் உறவினர்களிடம் வாங்கும் லஞ்ச பணம் மற்றும் பரிசு பொருட்கள் மேலும் 4 சிறைக் காவலர்களுக்கு கொடுக்கப் படுவதாகக் கூறினார். மேலும், ஜெயிலர் ஜெயராமனின் தூண்டுதலின் பேரிலேயே லஞ்சப் பணத்தைப் பெற்றதாக அவர் கூறினார். இதை அடுத்து, அவர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் ஜெயராமன் மதுரை மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு ஜெயிலராக இருந்த உதயகுமார் புழலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.
மதுரை மத்திய சிறைச்சாலையில் தான் தற்போது அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி அடைக்கப் பட்டுள்ளார். அவர் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
லஞ்ச புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டும், ஜெயிலர் ஜெயராமன் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்காமல், வழக்கமாக பணியிட மாற்றம்போல், மதுரை மத்திய சிறைக்கு மாற்றியிருப்பதாகவும், அந்த சிறையிலும், புழல் சிறையில் நடந்தது போன்ற முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்பிருப்பதால், அதற்கு முன், சிறைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்திருக்கிறது.





