மதுரை: பழனி உத்ஸவர் சிலை முறைகேடு குறித்த வழக்கை, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவை கவனித்து வரும் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலே விசாரிக்க வேண்டும் என்றும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய டிஜிபி உத்தரவை ரத்து செய்தும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவு பிறப்பித்தது.
பழனி பாலதண்டாயுதபானி திருக்கோவிலில் உத்ஸவர் சிலை செய்யப் பட்டதில் முறைகேடு நிகழ்ந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. 200 கிலோ எடையில் ஐம்பொன்னால் ஆன உத்ஸவர் சிலை செய்ததில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில், ஸ்தபதி முத்தையா, அப்போதைய கோவில் இணை ஆணையர் ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து, கும்பகோணம் சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தது. இதை அடுத்து இருவரும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரி விண்ணப்பித்தனர்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் முன்பு, வியாழக்கிழமை இன்று பிற்பகல் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்தபதி முத்தையாவுக்கும், கோவில் முன்னாள் இணை ஆணையர் ராஜாவுக்கு ஜாமீன் வழங்க அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
அதேபோல், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல், நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் நீதிமன்றத்தில் கூறியபோது, சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க நீதிமன்றத்தால் சிறப்பு அதிகாரியாக தாம் நியமிக்கப் பட்டாலும், தமிழக டிஜிபி இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளதால், பழனி கோவில் உத்ஸவர் சிலை முறைகேடு குறித்த வழக்கை தம்மால் விசாரிக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், இத்தகைய சூழலில் இருவருக்கும் ஜாமீன் வழங்கினால் வழக்கின் போக்கு மாறிவிடக் கூடும் என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதை அடுத்து நீதிபதி சுவாமிநாதன், ஸ்தபதி முத்தையா, கோவில் இணை ஆணையர் ராஜா ஆகியோருக்கு, வயது மூப்பினைக் கருத்தில் கொண்டு நிபந்தனை ஜாமீன் வழங்குவதாகவும், ஸ்தபதி முத்தையா 90 நாட்கள் சென்னையில் தங்கியிருக்க வேண்டும் என்றும், கோவில் முன்னாள் இணை ஆணையர் ராஜா, கோயம்புத்தூரில் 90 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், இருவருமே செல்போன், வீட்டு போன்களை உபயோகிக்கக் கூடாது என்றும், அவர்களை கண்காணிப்பதற்கு காவலர்களை நியமிக்க வேண்டும் என்றும், இதற்கு ஆகும் செலவை முத்தையா மற்றும் ராஜாவே ஏற்க வேண்டும் என்றும் நீதிபதி ஆணையிட்டார்.
அடுத்து, பழனி உத்ஸவர் சிலை முறைகேடு வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து ஆணை பிறப்பித்த நீதிபதி சுவாமிநாதன், ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசாரே இதை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதை அடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.






