மதுரை: சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு, மதுரைக்கு எழுந்தருளிய திருமாலிருஞ்சோலை மலை அழகர், இன்று காலை பக்தர்களின் கோவிந்த கோஷம் அதிர முழங்க வைகையில் இறங்கி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மதுரையில் சித்திரைத் திருவிழா நிறைவை அடைந்துள்ளது. அதன் ஓர் அம்சமாக, அழகர்கோவில் கள்ளழகர் மதுரைக்கு எழுந்தருளி வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. கள்ளழகரை எதிர்கொண்டு அழைத்து, வைகை ஆற்றில் இறங்குவதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரை நகரில் திரண்டனர்.
சித்திரை மாத வெயில்காலம் என்பதால், பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து, அன்பர்கள் உடல் குளிர, அடியவர் உளம் குளிர கள்ளழகரை வரவேற்றனர். முன்னதாக, கள்ளழகரை எதிர்கொள்ள வீரராகவப் பெருமாள் வைகையில் காத்திருந்தார். தொடர்ந்து, செழுமையைக் காட்டும் பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். அப்போது கோவிந்தா கோவிந்தா எனும் முழக்கம் அதிர முழங்கியது.
மதுரை மக்கள் கள்ளழகர் மேல் காட்டும் பக்தியும் அன்பும் சொல்லில் வடிக்க இயலாதது என்று எண்ணும்படி, ஆட்டமும் பாட்டமுமாக, அழகரை வரவேற்று மாலைகளும் நிவேதனங்களும் அளித்து தங்கள் ஒரு வருட காத்திருப்பை நிறைவேற்றிக் கொண்டனர்.
தமிழகம் முழுதும் இருந்து பக்தர்கள் லட்சக் கணக்கில் திரண்டிருந்தபோதும், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 5,000 போலீசார் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். கண்காணிப்பு கேமராக்கள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப் பட்டிருந்தது.
லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தங்கக் குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய வைபவத்தை தரிசித்து மகிழ்ந்தனர்.
மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வைகைக் கரைகளில் நேற்று இரவு முதலே பக்தர்கள் குவிந்திருந்தனர். எங்கும் ஒளி வெள்ளமாகக் காட்சி அளித்தது. மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.