சிதம்பரம்: சிதம்பரத்தில் அதிர்ச்சியூட்டும் விதமாக, பல்கலையில் பயின்று வந்த இளம் பெண் ஒருவர் இளைஞர் ஒருவரால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மயங்கிச் சரிந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் மாணவ-மாணவியர் பலர் படித்து வருகின்றனர். வெளியூர்களில் இருந்து வந்து படிப்பவர்கள் அங்கிருக்கும் விடுதிகளில் தங்கியிருக்கிறார்கள்.
வேலூர் மாவட்டம் கதம்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவி லாவண்யா, இங்கே தாமரை விடுதியில் தங்கியிருந்து, முதுகலை விவசாயம் படித்து வந்தார். இன்று காலை 10 மணி அளவில் விடுதியில் இருந்து மாணவி லாவண்யா வெளியே வந்தார். அப்போது அங்கே வந்த இளைஞர் ஒருவர், லாவண்யாவின் கழுத்தை கத்தியால் அறுத்தார். மாணவியின் அலறல் கேட்டு பயந்த அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். உடனே அங்கிருந்தவர்கள் அந்த நபரைத் துரத்திப் பிடித்து அண்ணாமலை நகர் போலீஸில் ஒப்படைத்தனர்.
கழுத்தறுபட்டு ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்த மாணவி லாவண்யாவை அருகில் இருந்தோர் மீட்டு சிதம்பரம் மருத்துவகல்லாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிடிபட்ட இளைஞரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த நபர் கதம்பம்பட்டியை சேர்ந்த நவீன் என்பதும், பொறியியல் பட்டதாரியான அவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருவதும் தெரியவந்தது. லாவண்யாவும் நவீனும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள்; நவீன் லாவண்யாவை 3 வருடங்களாக ஒரு தலையாகக் காதலித்து வந்தாராம். ஆனால் அவரை லாவண்யா திரும்பிக் கூடப் பார்க்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த நவீன் இன்று காலை லாவண்யாவின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.