பேஸ்புக்கில் காதலித்து, பெற்றோரை எதிர்த்து கல்யாணமும் செய்து கொண்டு, பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடையும் ஜோடிகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது.
குடியாத்தம் அருகே ‘பேஸ்புக்’கில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நான்கு காதல் ஜோடிகள் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தன. அவர்களில் ஒருவர் கல்லூரி மாணவி. வேலுார் மாவட்டம் குடியாத்தம் நெல்லுார்பேட்டையைச் சேர்ந்தவர் நந்தினி என்ற மாணவி. 20 வயதாகும் அவர், அங்குள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவருக்கும் ஆந்திர மாநிலம் நெல்லுாரைச் சேர்ந்த 22 வயதான சுமன் என்பவருக்கும் பேஸ்புக் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சுமன் அங்குள்ள மளிகைக் கடையில் வேலை செய்து வருகிறார். சுமார் 15 நாட்கள் இருவரும் ‘பேஸ்புக்’கில் அறிமுகமாகி பேசி, தொடர்ந்து காதலித்து வந்தனராம். இவர்களது காதலை அறிந்த இருவரது பெற்றோரும் இந்தக் காதலைக் கண்டித்துள்ளனர். ஆனால், அவர்களது கண்டிப்பைப் புறந்தள்ளிவிட்டு, வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி கடந்த 15 ஆம் தேதி குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் வைத்து, கல்யாணம் செய்து கொண்டதாம். பின்னர் இருவரும் தங்களுக்கு பாதுகாப்பு கோரி, குடியாத்தம் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.
இப்படி, பேஸ்புக் மூலம் பழகி காதலித்து திருமணம் செய்து கொண்ட மேலும் மூன்று ஜோடிகள் குடியாத்தம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். குடியாத்தம் சேதுக்கரையைச் சேர்ந்த ஆர்த்தி (20), பிரகாஷ்(22) என்ற ஜோடி, மாச்சனுாரைச் சேர்ந்த குமரேசன் (25) பவித்ரா(20), நாட்றம்பள்ளியைச் சேர்ந்த கோகிலா (20) விஜயன்(22) ஆகிய ஜோடிகள் பேஸ்புக் மூலம் காதலித்து வீட்டை விட்டு வெளியேறி கல்யாணம் செய்து கொண்டு குடியாத்தம் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனராம். இவர்கள் குறித்து சம்பந்தப்பட்ட நபர்களின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து, குடியாத்தம் மகளிர் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனராம்.
பேஸ்புக் என்பது தனிப்பட்ட எண்ணங்களைப் பரிமாறும் ஒரு தொடர்பு சாதனமாக முதலில் தொடங்கி, அரசியல் ரீதியாக கருத்துரு உருவாக்கும் தளமாகவும், வணிக ரீதியில் பயன்படுத்தும் தளமாகவும், இது போல் காதல் உள்ளிட்டவற்றை வளர்க்கும் கல்யாணத் தரகுத் தளமாகவும் மாறிவிட்டுள்ளது.




