தூத்துக்குடி கலவரத்தால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் மேலும் வன்முறைகள் தலையெடுக்கா வண்ணம் காக்க, துண்டிக்கப் பட்டிருந்த இணைய சேவை, நெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் வழங்கப்படும் என தமிழக அரசு கூறியதை அடுத்து, இன்று மாலை முதல் மீண்டும் தொடங்கியது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்ந்து, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், கலவரத்தில் பாதிக்கப்படாத குமரி, நெல்லையில் இணைய சேவை முடக்கம் குறித்து விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் நெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை வழங்கப் படும் எனவும், இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்கள் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் இணைய சேவை முடக்கம் தொடரும் என விளக்கம் அளிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று மாலை முதல் நெல்லை, குமரி மாவட்டங்களில் இணையத்துக்கு உயிர் கிடைத்துள்ளது.




