பாமக.,வின் முன்னணி தலைவரும், வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குரு உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று இரவு மரணம் அடைந்தார்.
வெகு நாட்களாக நுரையீரல் பாதிப்பு இருந்த நிலையில், சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு அண்மையில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப் பட்டது. சிகிச்சையில் இருந்த குருவை பாமக., நிறுவுனர் ராமதாஸ் இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் பார்த்து நலம் விசாரித்து வந்தார்கள். இந்நிலையில் அவருக்கு இரு தினங்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டும் பலனின்றி நேற்று இரவு அவர் காலமானார்.
காடுவெட்டி குரு 2001ஆம் ஆண்டு ஆண்டிமடம் தொகுதியில் இருந்தும், 2011ல் ஜெயங்கொண்டம் தொகுதியில் இருந்தும் 2 முறை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்து, நாடகக் காதல் திருமணங்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியவர். பின்னாளில் வன்னியர் சங்கமே பாட்டாளி மக்கள் கட்சியாக மாறியதில் முக்கியப் பங்கு வகித்தவர்.
அவரது உடல் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கே நாளை முற்பகல் உடல் தகனம் செய்யப் படுகிறது.
ஜெ.குரு மறைவைத் தொடர்ந்து காடுவெட்டியில் கடைகள் அடைக்கப்பட்டன. கடலூர், விழுப்புரம், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு நடைபெற்றுள்ளது. கடைகளும் அடைக்கப்பட்டன. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பஸ்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டதால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் மீதும் கல்வீசித் தாக்கப் பட்டது. இப்படி இங்கே 16 பஸ்கள் உடைக்கப்பட்டது தொடர்பாக 10 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இப்படி தொடர் தாக்குதலால், விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 19 பஸ்கள் சேதம் அடைந்தன. அரியலூர் மாவட்டத்தில் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோ, வேன்கள் ஓடவில்லை. மாவட்டம் முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அரியலூர் மாவட்டத்தில் 9 அரசு பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன.
திருவள்ளூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் பஸ்கள் உடைக்கப்பட்டன. இப்படி 9 மாவட்டங்களில் மொத்தம் 75 பஸ்கள் உடைக்கப்பட்டன. இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக அந்தப் பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீசி தாக்கியவர்களை தேடி வருகின்றனர்.





