அதிகம் வாட்டி வதைக்காத அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடையும் நிலையில், தமிழகம் முழுவதும் அடுத்த வாரத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு கோடையில் மக்களை அதிகம் வாட்டி வதைக்காத அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்றுடன் விடைபெறுகிறது. பொதுவாக, கோடைக் காலத்தில் அதிகபட்ச வெயில் என 108 முதல் 110 டிகிரி வரை கூட அடித்து அக்னி நட்சத்திரத்தில் வாட்டி வதைக்கும். அதிகபட்ச வெப்பநிலை, அனல் காற்று வீசுதல் என மக்களை கடுமையாக சோதிக்கும். ஆனால் இந்த ஆண்டு அதற்கு எதிர்மாறாக வெப்பநிலை தணிந்தே காணப்பட்டது.
மே 4ஆம் தேதி துவங்கி 24 நாட்கள் நீடித்த கத்திரி வெயில் காலம், இன்றுடன் விடைபெறுகிறது. இந்த நாட்களில் வெயில் அதிகபட்சமாக 100 டிகிரிக்கும் குறைவாகவே பதிவாகியுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தில் கோடை மழை பெய்து வந்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருந்தது.
வெயில் தகிக்கும் மாவட்டங்களில் இந்தாண்டு அவ்வப்போது மழை பெய்ததால், கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைந்தே காணப்பட்டது. இந்த சூழலில், இன்றுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைகிறது.
இதனிடையே, வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டின் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் மழை பதிவாகி வரும் சூழலில், தென்கிழக்கு அரபி கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுபகுதியால், அடுத்த வாரம் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.




