அதிமுக.,வை பதவி விலக்கும் தொடர் போராட்டத்தில் சற்றும் மனம் தளராத திமுக.,வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இப்போது தமது அடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளார். அந்தப் போராட்டம், ஸ்டாலினின் உள்நோக்கம் என்ன என்பதையும், எதற்காக இத்தனை போராட்டங்களை திமுக நடத்துகின்றது என்பதையும் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
முதலமைச்சர் பதவி விலகும் வரை பேரவை நிகழ்வுகளில் திமுக பங்கேற்காது என்று, இன்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள அந்த அறிவிப்புதான், ஸ்டாலினின் உள்நோக்கம் என்ன என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. முதலமைச்சர் பதவி விலக வலியுறுத்தி தலைமைச் செயலக வளாகத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் முழக்கம் எழுப்பினர்.
இந்நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள திமுக, முதலமைச்சர் பதவி விலகும் வரை அவை நடவடிக்கைகளில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளது இந்தப் பின்னணியை எடுத்துக் காட்டியுள்ளது.
தூத்துக்குடி நிகழ்வுகள் தொடர்பாக ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவர திமுக.,வினருக்கு அனுமதி மறுத்தார் அவைத்தலைவர் தனபால். ஆனால், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மான அடிப்படையில் பேச அனுமதித்தார்.
அப்போது பேசிய ஸ்டாலின், தூத்துக்குடியில் சீருடை இல்லாமல் காவலர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர் என்றும், எஸ்எல்ஆர் என்ற எந்திர துப்பாக்கி அங்கு பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், முதலமைச்சரின் விளக்க அறிக்கையில் துப்பாக்கிச் சூடு என்ற வார்த்தையே இடம்பெறவில்லை எனக் கூறிய ஸ்டாலின், போராட்டத்தில் சமூக விரோதிகள் ஈடுபட்டனர் என செய்தியாளர் சந்திப்பின்போது முதலமைச்சர் கூறியது கொச்சைப் படுத்துவதாக உள்ளது என்றார்.
ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து, மாநில உளவுத்துறை தமிழக அரசுக்கு அளித்த அறிக்கையை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்; ஆலையை மூடுவதாக அறிவித்திருப்பது வெறும் கண்துடைப்பு; இந்த அரசாணையை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா? என கேள்வி எழுப்பினார் மு.க.ஸ்டாலின்!
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டை தொடர்புபடுத்தி காவல்துறை அதிகாரிகள் குறித்து மு.க.ஸ்டாலின் கூறியது முதலமைச்சர் கோரிக்கையை ஏற்று அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதையடுத்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.




