சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காமெடி நாயகனாக ஜொலித்தார். ”என்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று கூறுவதைத் தவிர்க்க வேண்டும், காளையை அடக்குங்கள் என்று சொன்னால் என்பாடு திண்டாட்டமாகிவிடும்” என்று கூறி, சபையில் சிரிப்பலையை சிதறவிட்டார் துணை முதல்வர் ஓபிஎஸ்.
ஜல்லிக்கட்டு நாயகன் என தம்மை அழைக்க வேண்டாம் எனக் கூறிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நான்கு தலை பிரம்மா போல, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செயல்படுவதாக புகழாரம் சூட்டியுள்ளார்.
சட்டப் பேரவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துப் பேசினார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அப்போது அவர், தமிழகத்தில் பல இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்க்க தாம் செல்வதாகக் கூறினார்.
யாராவது ஜல்லிக்கட்டு நாயகன் வந்துள்ளார், அவர் காளையை அடக்க வேண்டும் என்று என்னைப் பார்த்துக் கூறிவிட்டால், என் பாடு திண்டாட்டம் ஆகிவிடும் என நகைச்சுவையாகக் கூறினார். இதனால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
உள்ளாட்சித்துறை குறித்த திமுக உறுப்பினர் தாமோ. அன்பரசன் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசிய அவர், தலையில்லாத உடலாக உள்ளாட்சித்துறை செயல்படவில்லை; நான்கு தலைகள் கொண்ட பிரம்மா போல எஸ்.பி.வேலுமணி சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்று கூறி சிரிப்பலையை மேலும் அதிகரிக்கச் செய்தார்.




