காலா படத்துக்கு எதிர்ப்புகள் அதிகம் வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், நான் எதிர்பார்த்ததை விட எதிர்ப்புகள் குறைவாகத்தான் உள்ளன என்று கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது அவர், காலா பட வெளியீடு குறித்து கர்நாடக அரசு ஏற்பாடு செய்யும் என நம்புகிறேன். படத்தை தடை செய்ய தேவகவுட விடமாட்டார். அரசியலையும் தொழிலையும் ஒன்றுபடுத்திப் பார்ப்பது சரியல்ல. ஆனால் இங்கே இரண்டையும் ஒன்றாகவே பார்க்கிறார்கள் என்று கூறினார் ரஜினிகாந்த்.
முன்னதாக, காலா படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு நாடார் சங்கம் மற்றும் சென்னை நாடார் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் வரும் வியாழனன்று வெளியாகிறது. ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்புக்குப் பின்னர் வெளியாகும் படம் என்பதால் மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எதிர்ப்புகளும் அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் காலா படத்துக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. திரவியம் நாடாரின் மகன், காலா படத்திற்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். தொடர்ந்து, காலா படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக முதல்வரின் தனிப் பிரிவில் சென்னை மற்றும் தமிழ்நாடு நாடார் சங்கங்கள் இணைந்து மனு கொடுத்துள்ளன.
திருநெல்வேலியில் இருந்து மும்பை சென்று அங்கிருந்த தமிழர்களுக்கு நன்மைகள் செய்து கூத்வாலா சேட் என்று அன்பாக அழைக்கப்பட்ட திரவியம் நாடாருடைய கதையைத் தான் காலா படமாக எடுத்திருக்கிறார்கள். ஆனால், நாடார் சமூகத்தைச் சேர்ந்த அவரை, வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவராகக் காட்டுவது, திட்டமிட்டு செய்யப்படும் இருட்டடிப்பு வேலை என்று குற்றம் சாட்டுகிறார்கள் தமிழ்நாடு நாடார் சங்கப் பேரவையினர்.
படத்தில் காலா கதாபாத்திரத்தை நாடார் சமூகத்தைச் சேர்ந்தவராக காட்டியிருக்கிறார்களா அல்லது தலித் சமூகத்தைச் சேர்ந்தவராக காட்டியிருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காலா டிரெய்லர் காட்சிகளின் அடிப்படையிலேயே இந்தக் குற்றச்சாட்டை நாங்கள் கூறுகிறோம். அண்மையில் வெளியான அமெரிக்க தியேட்டர் விளம்பரத்திலும் காலா படம் நெல்லைத் தமிழரின் கதை தான் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், படத்தில் ரஜினி வரும் காட்சிகளின் பின்னணியில் தலித் மக்களின் அடையாளங்கள் காட்டப்படுகின்றன. இப்படத்தின் இயக்குநர் ரஞ்சித் தலித்திய சிந்தனையாளர். எனவேதான் எங்களுக்கு சந்தேகம் அதிகரித்துள்ளது. இது தொடர்பில், அரசுத் தரப்பிலும் படக்குழு தரப்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம். இல்லாவிட்டால், படத்தை தியேட்டர்களில் ரிலீசாகவிட மாட்டோம் என்று நாடார் சங்கப் பேரவையினர் கூறியுள்ளனர்.




