இடி தாக்கியதில் தஞ்சை பெரியகோயில் நுழைவு வாயிலில் உள்ள கேரளாந்தகன் கோபுரத்தில் லேசான சேதம் ஏற்பட்டுள்ளது.
தஞ்சையில் இன்று மாலை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. இந் நிலையில் பெரிய கோவிலின் இரண்டாவது நுழைவு வாயிலான கேரளாந்தகன் கோபுரத்தின் இடது புறத்தில் இடி தாக்கியது.
சுமார் 90 அடி உயரம் உள்ள இந்த கோபுரத்தின் மீது இடிதாங்கி அமைக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும், அந்த இடிதாங்கியும் சேதம் அடைந்து கோபுரத்தின் மேல் பகுதியில் இருந்த யாளி சுதைச் சிற்பமும் சேதம் அடைந்தது.
இடி தாக்கி சேதம் அடைந்த யாளி சிற்பமும் கோபுரத்தின் மேல் பகுதியிலேயே சரிந்து, கீழே விழாமல் தாங்கி நின்றதால், பக்தர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதனிடையே இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அதிகாரிகள், இடிதாங்கி பொருத்தப் படாமல் இருந்திருந்தால் கோபுரத்துக்கு மிகப் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கும் என்றனர்.
கோயில் பிரதான வாயில் கோபுரம் சேதம் அடைந்ததால், தேவையான பரிகார பூஜைகள் செய்யப் படும் என்றும், அதன் பின்னர் ஓரிரு நாளில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப் படும் என்றும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப் பட்டது.
இருப்பினும், கோயில் கோபுரத்தில் சேதம் ஏற்பட்டதால், பக்தர்கள் இதனை அபசகுனமாகவே கருதுகின்றனர்.




