தென்காசி, செங்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால், மலைப் பகுதியில் கடும் மழை பெய்து, வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவிகளில் வெள்ளம் அதிகமாக இருப்பதால், அருவிகளில் குளிக்க தடை நீடிக்கப் பட்டுள்ளது.
சூறாவளிக் காற்று காரணமாக வெளியில் செல்லும் மக்கள் அச்சத்துடனேயே நடந்து செல்கின்றனர். வாகனங்களில் செல்வோர் மிகுந்த பாதுகாப்பு உணர்வுடன் கடந்து செல்வதைக் காண முடிந்தது.
இருப்பினும், பழைய குற்றாலம் அருவியில் பாதுகாப்பான அளவில் தண்ணீர் விழுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல் போட்டு வருகின்றனர். சனி, ஞாயிறு வார விடுமுறை தினத்தில் குற்றாலம் வந்தவர்கள், பழைய குற்றாலம் சென்று ஏக்கத்தைத் தீர்த்துக் கொள்கின்றனர்.






