ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள சீனா செல்லும்பிரதமர் நரேந்திர மோடி இன்று அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பிங்-கை சந்தித்துப் பேசுகிறார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 18-வது மாநாடு சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியாவும், பாகிஸ்தானும் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்துடன் முதன் முறையாக கலந்து கொள்கின்றன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது, பிராந்தியத்தில் அமைதியை நிலை நாட்டுவது குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மாநாட்டில் கலந்து கொள்ளும் நாடுகளின் தலைவர்களுக்கு ஜி ஜிங்பிங் நாளை விருந்தளிக்கிறார். இதில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, ஜி ஜிங்பிங்கை சந்தித்துப் பேச உள்ளார். மற்ற நாடுகளின் தலைவர்களையும் மோடி சந்திக்க உள்ள நிலையில், பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசைனை அவர் சந்திப்பாரா என்பது குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை.
மேலும் இந்தியா-சீனா இடையே நீடிக்கும் எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்த சந்திப்பு ஒரு முன்னொடியாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.



