சென்னை: சென்னையில் வாடிக்கையாளர்களிடம் வங்கியில் இருந்து பேசுவதுபோலப் பேசி, ஏ.டி.எம். கிரெடிட் கார்ட் அட்டை குறித்த தகவல்களைப் பெற்று பணமோசடி செய்த தில்லி கும்பலைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். இது குறித்து போலீஸார் தெரிவித்த தகவல்: சென்னை அம்பத்தூர் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் பகுதி மேலாளராக இருப்பவர் பிரகாஷ். இவர் சில நாள்களுக்கு முன்பு சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் ஒரு புகார் அளித்தார். அந்த மனுவில், தங்களது வங்கியின் வாடிக்கையாளர்கள் 42 பேரிடம் சில மர்ம நபர்கள் வங்கியில் இருந்து பேசுவதுபோல பேசி, அவர்களது ஏ.டி.எம். அட்டைகள் பற்றிய ரகசிய எண், காலாவதி நாள், சி.வி.வி. எண் ஆகியவற்றை தெரிந்து கொண்டு மோசடி செய்துள்ளனர். இந்தப் புகார் குறித்து சைபர் குற்றப்பிரிவுப் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். போலீஸார் நடத்திய விசாரணையில், தில்லியில் இருந்து ஒரு கும்பல்தான் இந்த மோசடியில் ஈடுபடுவது தெரியவந்தது. ஏனெனில் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து திருடப்படும் பணம், ஏர்டெல் மணி கணக்குக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதும், அங்கிருந்து சிலரின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த ஏர்டெல் செல்லிடப்பேசி சிம்கார்டை பெற்றுக் கொடுத்த முகவர்கள், புதுதில்லி உத்தம்நகர் ஹாஸ்ட்சல் சாலை பகுதியைச் சேர்ந்த தே.தீப்குமார் (33), அதேப் பகுதியைச் சேர்ந்த இ.பிரவீண்குமார் காசியப் (32) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் இருவரும் சிறிய அளவில் சூப்பர் மார்க்கெட்டும், எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருவதும், அங்கு புதிய சிம்கார்டுகள் பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் வழங்கும் ஆவணங்களை 3 நகல்களுக்கு மேல் வாங்கி, அதன் மூலம் தங்களுக்கு 3 சிம் கார்டுகள் வரை வாங்கியிருப்பதும் தெரியவந்தது. இவ்வாறாக போலி சான்றிதழ் பெறப்பட்ட சிம்கார்டுகளை அதேப் பகுதியைச் சேர்ந்த அஸ்ரப்அலி, சன்னி ஆகிய இருவருக்கு விற்பனை செய்திருப்பதும், அவர்கள் அந்த சிம்கார்டுகள் மூலமாகவே ஏர்டெல் மணி கணக்கு தொடங்கியிருப்பதும் போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் தீப்குமாரையும், பிரவீண்குமார் காசியப்பையும் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் வழக்கின் முக்கிய எதிரிகளான அஸ்ரப் அலியையும்,சன்னியையும் போலீஸார் தேடி வருகின்றனர். வங்கி அலுவலர்கள் பேசுவதுபோல பேசி வாடிக்கையாளர்களிடம் தகவல்களைப் பெறுவதற்கு மோசடிக் கும்பல் புது தில்லியில் போலி கால்சென்ட்டர் ஒன்றையே நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. வங்கிகளில் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு சேவைகளைப் பற்றி பேசுவதற்கும், வாடிக்கையாளர்களின் சேவையை மேம்படுத்துவது குறித்து பேசுவதற்கும் கால்சென்ட்டர்களை வங்கிகள் நடத்தி வருகின்றன. இதே உத்தியை மோசடி கும்பலும் பயன்படுத்தி இருக்கிறது. வாடிக்கையாளர்களிடமிருந்து தகவல்களை திருட்டுத்தனமாகப் பெறுவதற்காக போலி கால்சென்ட்டர்களை, வழக்கின் முக்கிய எதிரிகளான அஸ்ரப் அலியும், சன்னியும் நடத்தி வந்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக கால்சென்ட்டர்களில் வேலை செய்தவர்களிடமும் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். கால்சென்ட்டர்களில் வேலை செய்தவர்களிடமிருந்து செல்லிடப்பேசி, சிம்கார்டு ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் போலீஸார், இந்த கும்பல் எத்தனை பேரிடம் மோசடி செய்துள்ளார்கள் என்ற விவரத்தையும் திரட்டி வருகின்றனர்.
வங்கியில் இருந்து பேசுவதுபோல் கிரெடிட் கார்ட் தகவல்களைப் பெற்று பணமோசடி: தில்லி இளைஞர்கள் 2 பேர் கைது
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari