பாலி: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஈழத் தமிழர் சுகுமாரன் உள்பட 8 பேரை சுட்டுக்கொன்று இந்தோனேசியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆன்ட்ரூ சான், ஆஸ்திரேலிய வாழ் ஈழத் தமிழரான மயூரன் சுகுமாரன் ஆகியோர் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றுமாறு தீர்ப்பளித்தது. இதையடுத்து இருவரும் அதிபருக்கு கருணை மனு அனுப்பினர். ஆனால் அவை நிராகரிப்பட்டன. இதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் ஆன்ட்ரூ சான், சுகுமாரன், நைஜீரியா, பிரேசில் நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒரு இந்தோனேசியர் என 8 பேருக்கு புதன்கிழமை இன்று அதிகாலை நுசகம்பங்கன் தீவில் உள்ள சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர்கள் எட்டு பேரும் துப்பாக்கியால் சுடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர்களுடன் சேர்த்து பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மேரி ஜேன் பீஸ்டா வெலோசோவுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவருக்கான தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. அவரை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் வேண்டுமென்றே யாரோ சிக்க வைத்ததாக பிலிப்பைன்ஸ் அதிபர் தெரிவித்ததன் பேரில் நிறுத்தி வைக்கப்பட்டது. பல்வேறு வேண்டுகோள்களுக்கு மத்தியிலும், ஆன்ட்ரூ மற்றும் சுகுமாரனுக்கு மரண தண்டனை நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியா இந்தோனேசியாவுக்கான தனது தூதரை வாபஸ் பெற்றுள்ளது.
இந்தோனேசியாவில் ஈழத் தமிழர் சுகுமாரன் உள்பட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
Popular Categories



