திண்டுக்கல்: ஜெயலலிதா பணத்தைக் கொள்ளையடித்தார். தினகரன் அதைத் திருடிவிட்டார். இவ்வாறு பேசினார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். அதைக் கேட்டு அதிர்ச்சியாகிக் கிடக்கிறார்கள் அதிமுக.,வினர்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மேடையேறி வாய் திறந்தால், ஏதாவது ஒரு சர்ச்சை அப்போதே கிளம்பும் என்று கூறும் வகையில், தற்போதும் ஒன்றைப் பேசியிருக்கிறார். அவர் வாய்த் தவறுதலாக உண்மையைப் பேசி சிக்கிக் கொண்டு விட்டாரா என்றும் கூடத் தோன்றும். ஜெயலலிதா அப்பலோ ஆஸ்பத்ரியில் இருந்தபோது, இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார் என்றெல்லாம் நாங்கள் சொன்னது பொய். அய்யா… எங்களை மன்னிச்சிடுங்க.. என்று கையெடுத்துக் கும்பிட்டு, பகிரங்க மன்னிப்பைக் கேட்டார் மதுரையில் நடந்த ஒரு கூட்டத்தில்!
இப்போது மேலும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் திண்டுக்கல் சீனிவாசன். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அதிமுக சார்பில் காவிரி மீட்பு போராட்டம் வெற்றி பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டிடிவி தினகரன் திருடி விட்டார். ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திருடித்தான் 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் தினகரன் கொடுத்துள்ளார்…. இவ்வாறு பேசிக்கொண்டே போனவர், திடீரென முழித்துக் கொண்டார். கொள்ளையடித்த உங்களின் கும்பலால்தான் ஜெயலலிதா சிறைக்குச் சென்றார். மனம் நொந்துபோய்தான் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. உங்களுக்கு தினம் தினம் சோதனை வருகிறது என்றால், ஜெயலலிதாவின் ஆன்மா உங்களை தண்டித்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
தினகரன் யார்? ஜெயலலிதாவால் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டவர். உங்களை உறுப்பினராகக் கூட சேர்க்கவில்லை. ஆனால் அந்த துரோகியின் பின்னால் 18 எம்எல்ஏக்கள் சென்றனர் என்று பேசினார் திண்டுக்கல் சீனிவாசன்.
ஜெயலலிதா கொள்ளை அடித்தார் என்று எக்குத்தப்பாக உளறினாரோ, அல்லது உண்மையைப் போட்டுடைத்தாரோ…! ஆனால், அதிமுக.,வில் மட்டும் ஒரு புயல் நிச்சயம் வீசும் என்பது மட்டும் உண்மை!




