நம் தேசத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் பெண்கள் பாதுகாப்பு குறித்த தாம்சன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன் அமைப்பின் ஆய்வறிக்கை உள் நோக்கம் கொண்டது என்றும், இதில் மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும் பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில்,
கடந்த 2007ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி “இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் சுமார் 83% உயர்ந்திருப்பதாகவும்”, “உலகில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது” எனும் அதிர்ச்சிகரமான தகவலை லண்டனில் செயல்பட்டு வரும் “தாம்சன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன்” என்ற அமைப்பு தனது ஆய்வறிக்கை மூலம் தெரிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மேலும் 130கோடி மக்கள் தொகை கொண்ட அகண்டு, விரிந்த நமது பாரதத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட நிபுணர்களிடம் ஆலோசித்து இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு குறித்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தாம்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது நம்மிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
சுமார் 130கோடி மக்கள் தொகை கொண்ட அகண்டு, விரிந்த நமது பாரதத்தில் வெறும் 500க்கும் மேற்பட்ட நிபுணர்கள் தான் நமது இந்திய பெண்களின் பாதுகாப்பு நிலை குறித்து இறுதி முடிவெடுக்க முடியும் என்றால் நமது இந்தியாவில் ஜனநாயகத்தின் பெயரால் நடைபெறும் ஆட்சி எதற்கு? நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் “கப்பல்படை, விமானப்படை, தரைப்படை” உள்ளிட்ட ராணுவம், மக்களின் பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் “ஆயுதப்படை, அதிரடிப்படை” உள்ளிட்ட காவல்துறையின் பங்களிப்பு எதற்கு?
பெண்மையை போற்றுகின்ற வகையில் நமது நாட்டை “தாய்நாடு” என்றும், “பாரதமாதா” என்றும் அழைப்பதோடு, பெண்களுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் நதிகளுக்கு பெண்களின் பெயரைச் சூட்டி அழகு பார்த்து வரும் நமது தேசத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள் நம்மை கவலை கொள்ளச் செய்வதை மறுப்பதற்கில்லை.
இந்த சூழ்நிலையில் பெண்கள் பாதுகாப்பு குறித்த ஆய்வறிக்கை மூலம் பாஜகவையும், பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் இழிவுபடுத்தும் நோக்கில் நமது தேசத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சர்வதேச சக்திகள் முனைகின்றனவோ? என்கிற ஐயம் எழுவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை.
ஏனெனில் சிறுபான்மை சமூகத்தின் பெண்கள் மீது நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளையும், அந்த குற்றச்செயலில் ஒரு இந்து ஆண் ஈடுபட்டிருந்தால் இந்துத்துவா சக்திகள் என அனைத்து இந்துக்களையும் கடுமையாக எதிர்த்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகள், பெரும்பான்மையான இந்து சமூகத்தை சேர்ந்த பெண்கள் பாதிக்கப்படும் போதும், அந்த குற்றச்செயலில் ஒரு சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஆண் ஈடுபட்டிருந்தால் அது குறித்து வாய் திறந்து கருத்து தெரிவிக்க கூட கையாலாகாதவர்களாகவே இருக்கின்றனர் என்பதை பல்வேறு நிகழ்வுகளில் கண்கூடாக கண்டு வருகிறோம்.
இந்துக்களுக்கு ஆதரவாக பேசி விட்டால் அவர்களை சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிரானவர்களாக சித்தரித்து, சிறுபான்மை சமூகத்தினரின் வாக்குகள் வேண்டும் என்பதற்காக ஜாதி, மத வேறுபாடின்றி இருக்கும் மக்களுக்குள் பிரிவினையை ஊட்டி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட சுயநலமிக்க பெரும்பாலான அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர் என்பது மறுக்க முடியாத நிதர்சனமான உண்மை.
சமீபகாலமாக இந்தியாவின் வட மாநிலங்களில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து பொங்கியெழுந்த தமிழக அரசியல்வாதிகள் தற்போது கேரளாவில் பாவமன்னிப்பு கோரிய பெண்ணை ஒன்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை செய்து, தாங்கள் பாலியல் வன்கொடுமை செய்ததை ஆபாச காணொளியாக பதிவு செய்து, அதனை பிறருக்கும் பகிர்ந்து மன்னிக்க முடியாத தவறை செய்திருக்கும் தகவல் ஊடகங்களில் கடந்த சில நாட்களாக உலா வந்து கொண்டிருக்கிறது.
கடவுளின் தூதர்களாக பார்க்கப்படும் பாதிரியார்கள் வேலியே பயிரை மேய்ந்த கதையாக பாவமன்னிப்பு கோரிய பெண்ணையே தங்களின் காம இச்சைக்கு பலிகடாவாக்கியதை காங்கிரஸ், திமுக, அதிமுக, விசிக, பாமக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டிக்க திராணியற்று, வாய் மூடி மெளனமாக இருப்பதின் ரகசியம் என்ன? என்கிற மிகப்பெரிய கேள்வி நம் மனதில் எழுவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை.
கடந்த 2007ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் சுமார் 83% உயர்ந்திருக்கிறது என்றால் பாஜகவிற்கு முன் இந்தியாவை ஆட்சி செய்தது காங்கிரஸ் தானே? அப்படியானால் இந்தியப் பெண்களின் பாதுகாப்பு மீது காங்கிரஸிற்கும் அக்கறை இல்லை என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என எடுத்துக் கொள்ளலாமா?
எனவே “உலகில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது” எனும் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டு லண்டனில் செயல்பட்டு வரும் “தாம்சன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன்” அமைப்பு நமது தேசத்தின் மீதான நற்பெயருக்கு உலக அரங்கில் களங்கம் கற்பிக்க முயல்வதாகவே தெரிகிறது.
எனவே “தாம்சன் ராய்ட்டர்ஸ் பவுண்டேஷன்” அமைப்பின் ஆய்வறிக்கை குறித்தும், அந்த அமைப்பின் குற்றச்சாட்டில் இருக்கும் உள்நோக்கம் குறித்தும் உரிய விசாரணை நடத்தி அதில் உண்மை இல்லை என்பது நிருபணமானால் அந்த அமைப்பு மீது இந்தியா இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அது குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஒளிவு, மறைவின்றி வெளியிட வேண்டும் எனவும் மத்திய அரசையும், பாரத பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகியோரை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.
– என்று தமிழ்நாடு பால்முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவுனர் மற்றும் மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறியுள்ளார்.




