அரக்கோணத்தில் ஆசிரியை இடமாறுதலை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஏற்கெனவே பகவான் என்ற ஆசிரியரின் இடமாறுதலுக்கு மாணவர்கள் போராட்டம் நடத்தி இது செய்தியாக ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அரக்கோணம் அருகே அரசு பள்ளி ஆசிரியை பணியிடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரக்கோணத்தை அடுத்துள்ள சேந்தமங்கலத்தில் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 1200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கே தமிழாசிரியராக பணியாற்றி வந்தவர் விஜயா. இவர் இதே பள்ளியில் 30 ஆண்டு காலம் பணியாற்றியுள்ளார். இவர் மாணவர்களிடம் மிகவும் அன்பாகவும், இயல்பாகவும் நடந்து கொள்பவர் எனப்படுகிறது. இந்நிலையில் ஆசிரியர் விஜயாவுக்கு பள்ளிக் கல்வித் துறை பணியிட மாறுதலுக்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், தங்கள் தமிழ் ஆசிரியரை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது எனக் கோரி, பள்ளியின் முன்பு வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையின் நடுவில் திரண்ட மாணவர்கள், ஆசிரியர் பணியிட மாற்றத்தை ரத்து செய்யக் கோரி முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
இதையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மாணவர்கள், மற்றும் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது கோரிக்கை குறித்து உரிய உயர் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து மாணவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு வகுப்புகளுக்குச் சென்றனர்.
கடந்த காலங்களில், கல்வித் துறை அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் முறைகேடான வகையில் பணம் சேர்க்க, இவ்வாறு ஆசிரியர்களை பணி இட மாறுதல் செய்து, அந்த இட மாறுதலை ரத்து செய்ய லஞ்சம் பெற்ற சம்பவங்கள் எல்லாம் உண்டு. இப்போது, அத்தகைய இடமாறுதலை ரத்து செய்ய ஆசிரியர் பகவான் ஒரு வழியைக் காட்டியிருக்கிறார். மாணவர்களிடம் பாசமாகவும், பணியில் ஒழுக்கமாகவும் இருந்தால் போதும், மாணவர்களின் ஆதரவில் இத்தகைய இடமாறுதல்களை சரி செய்ய இயலும் என்பதுதான் அந்த வழி!





