திருவாரூர்: திருவாரூர் அருகே அதிகாரிகளின் நெருக்கடி காரணமாக, ஊராட்சி ஒன்றியப் பணியாளர், பணியிட மாற்றம் கிடைக்காமல் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். திருவாரூர் அருகே உள்ள அம்மையம்மன் கிராமம் உப்புக்காரத் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன்(38). இவருக்கு மனைவி மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஓவர்சியராக வேலை செய்து வந்த இவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீட்டில் இருந்தார். மாலை 4 மணி அளவில் வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள வயல் பகுதிக்குச் சென்று, திடீரென தன் உடம்பில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அருகில் இருந்தோர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இது குறித்து கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். அப்போது முத்துக்கிருஷ்ணன் தனக்கு பணியிட மாறுதல் கேட்டதாகவும், பணியிட மாறுதல் கிடைக்காததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது. முத்துகிருஷ்ணன் கடந்த 6 மாதத்திற்குமுன் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் வரைவாளராக வேலை செய்து வந்தார். அங்கு பணியிலிருந்த செயற்பொறியாளர் செந்தில்குமார் என்பவரின் நெருக்கடி காரணமாக, நன்னிலம் ஒன்றிய அலுவலகத்திற்கு பணிஇட மாறுதல் பெற்றுச் சென்றார். அங்கே சென்ற பிறகும் செயற்பொறியாளர் செந்தில்குமாரின் நெருக்கடி தொடர்ந்து நீடித்து வந்ததாகவும், இதனால்தான் அவர் தற்கொலையில் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது. இதுகுறித்து நன்னிலம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானகிருஷ்ணனிடம் கேட்டபோது, முத்துகிருஷ்ணன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 20 நாட்களுக்கு மேலாக விடுமுறையில் இருந்து வந்ததாகவும், கடந்த 30ம்தேதிதான் பணியில் சேர்ந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் முத்துக்கிருஷ்ணன் பணியிட மாறுதல் கோரி எந்த விண்ணப்பமும் கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் முத்துக்கிருஷ்ணனின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாரிகள் நெருக்கடி: ஊராட்சி ஒன்றிய பணியாளர் தீக்குளிப்பு?
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari